search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில்கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    தேர்தலில்கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

    தேர்தலில் தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்கும் நடவடிக்கையை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சார்பில் வழக்கு ஒன்று ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘அக்டோபர் 17 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து கடந்த அக்டோபர் 4-ந்தேதி உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில், ‘இந்த தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றி முறையான அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் 31-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

    மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யவில்லை என்றால், அவர்களது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். அதேநேரம், உள்ளாட்சி தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடாமல் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யவேண்டும்’ என்றும் நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்குகள் சில நீதிபதி என்.கிருபாகரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ‘உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவில், புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டிவிசன் பெஞ்ச், தடை எதுவும் விதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, டிசம்பர் 31-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சில வழக்குகள் நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் நடைமுறை சிக்கல்கள் சில உள்ளன. அதேநேரம் இந்த உத்தரவை அமல்படுத்தும்விதமாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். அரசியல் கட்சிகள் பதிலளித்ததும், கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். அதற்கு காலஅவகாசம் வேண்டும்’ என்றார்.

    இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், ‘குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனக் கூறினாலும், அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போதே பொறுப்புடன் செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை திறமையாக செயல்படுத்த முடியுமா?, முடியாதா? என்பது பற்றி தேர்தல் ஆணையம் கவலைப்படத் தேவையில்லை. ஐகோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்துவிட்டால், அதை அமல்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதில் ஏதாவது நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அது தொடர்பாக இந்த ஐகோர்ட்டை எப்போது வேண்டுமென்றாலும் அணுகலாம்.

    தேர்தல் அறிவிப்பு வரை காத்திருக்காமல் இந்த உத்தரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து பதிவு பெற்ற அரசியல் கட்சிகளுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதி, இந்த உத்தரவை விரைந்து அமல்படுத்தவேண்டும். இந்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்’ என்று உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
    Next Story
    ×