search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பணத்தை ஒழிப்பதாக மோடி நாடகமாடுகிறார்: திருமாவளவன் பேட்டி
    X

    கருப்பு பணத்தை ஒழிப்பதாக மோடி நாடகமாடுகிறார்: திருமாவளவன் பேட்டி

    கருப்பு பணத்தை ஒழிப்பதாக மோடி நாடகமாடுகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

    சென்னை:

    சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறாரா? அல்லது மீட்க நடவடிக்கை எடுக்கிறாரா? கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி எடுத்த திட்டம் தவறானது. இதனால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடி கருப்பு பணம் நோட்டுகளை மட்டும் தான் ஒழிக்கிறாரே தவிர கருப்பு பணம் உருவாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை. மோடியின் இந்த நடவடிக்கையை முதலில் அரசியல் கட்சிகள் எதிர்க்க வில்லை. பின்னர் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்த பிறகுதான் அவரது கருப்பு பண நடவடிக்கை முற்றிலும் தவறானது என்பது தெரிந்தது.

    மோடியின் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்கள் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். மோடி இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் தேர்தலில் எவ்வளவு செலவு செய்தார் என்று சொல்ல முடியுமா? தேர்தல் கமி‌ஷன் விதித்த விதிமுறைக்குட்பட்டது தான் செலவு செய்தாரா? பா.ஜனதாவுக்கு யார், யார் தேர்தல் நன்கொடை என்பதை தெளிவுப்படுத்த முடியுமா? கருப்பு பணத்தை ஒழிப்பதாக மோடி நாடகமாடுகிறார். இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது.

    கருப்பு பணம் பற்றி ஆளும் கட்சி மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது. மக்களின் நலன் கருதி இதை திரும்ப பெற வேண்டும். கம்யூனிஸ்டு கட்சிகள் நடத்தும் போராடத்தில் நான் மதுரையில் கலந்து கொள்கிறேன். டிசம்பர் 6-ந்தேதி அரசியல் பாதுகாப்பு மாநாடு புதுச்சேரியில் நடக்கிறது. இதில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×