search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 வாரங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் ரத்து நீடிப்பு: தி.மு.க.வுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    4 வாரங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் ரத்து நீடிப்பு: தி.மு.க.வுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    உள்ளாட்சி தேர்தல் ரத்தை 4 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்குமாறு தி.மு.க., தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘தமிழக அரசு எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று மனுதாரர் கூறுவதை ஏற்கவில்லை.

    அதேநேரம், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி இந்த தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்கிறேன். பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றி, முறையான கால அவகாசத்துடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும், அந்த உத்தரவில், உள்ளாட்சி தேர்தல்களில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் போட்டியிடுகின்றனர்.  இதை அனைத்து கட்சிகளும் தடுக்கவேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளின் விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடவில்லை என்றால், அவர்களது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

    கடந்த 4-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி நீதிபதிகள் ஹூலு வாடி ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டார்கள்.

    இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் குமார், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, தி.மு.க. சார்பில் வக்கீல் வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு:-

    மூத்த வக்கீல் குமார்:- தி.மு.க. தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றோ, வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றோ கேட்கவில்லை. ஆனால், தனி நீதிபதி கிருபாகரன், தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் 9 வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளார். அதில், வேட்பாளர்கள் தங்களது குற்றப்பின்னணி விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றால், அந்த வேட்புமனுக்களை நிராகரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஆனால், இந்த உத்தரவு இந்த வழக்கில் தொடர்பில்லாதது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றால், தமிழக பஞ்சாயத்து சட்டத்தில் புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    நீதிபதிகள்:- இப்படி ஏன் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்? உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டியது மாநில தேர்தல் ஆணையமா? அல்லது இந்த ஐகோர்ட்டா?

    மூத்த வக்கீல் வில்சன்: 9 வழிகாட்டுதல்களுடன் இந்த ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததில் எந்த தவறும் இல்லை. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தேர்தல் தொடர்பான வழக்கில் இதேபோன்ற வழிகாட்டுதல்களை கடந்த 2002ம் ஆண்டே பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின் அடிப்படையில்தான், தனி நீதிபதி கிருபாகரனும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    நீதிபதிகள்:- தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் பணி. வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடவில்லை என்றால் வேட்புமனுவை நிராகரிக்கவேண்டும் என்றெல்லாம் இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியுமா? உள்ளாட்சி தேர்தலை நடத்துவது இந்த ஐகோர்ட்டின் பணியா? அல்லது மாநில தேர்தல் ஆணையத்தின் பணியா?

    வில்சன்:- இரவோடு இரவாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டனர்.  ஆளும் கட்சியினருக்கு எந்த தொகுதி? யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? என்று தெரியும். அப்படி செய்ததால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தில் புதிய விதிகளை உருவாக்குவது ஒன்றும் கடினம் இல்லை.

    நீதிபதிகள்:- இந்த வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைக்கிறோம். இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தமிழக அரசும், எதிர் மனுதாரர் தி.மு.க.வும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். தற்போது உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்தப்போகிறீர்கள்?

    பி.குமார்:- தனி நீதிபதி 9 வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளதால், அதுகுறித்து தமிழக அரசு பஞ்சாயத்து சட்டத்தில் விதிகளை உருவாக்கவேண்டும். அது தொடர்பான சட்டத்திருத்தங்களை கொண்டு வந்த பின்னர்தான் தேர்தல் ஆணையத்தினால், தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    நீதிபதிகள்:- தமிழக அரசு புதிய விதிகளை கொண்டு வர உள்ளதா?

    அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி:- தேர்தல் அறிவிப்பு தொடர்பாக எந்த கோரிக்கையையும் இந்த ஐகோர்ட்டு முன்பு தி.மு.க. வைக்கவில்லை. அவர்களது மனுக்களை வாங்கிப்பாருங்கள். ஆனால், தனி நீதிபதி, கேட்காத கோரிக்கையை ஏற்று, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து விட்டார். அது மட்டுமல்லாமல், 9 வழி காட்டுதல்களையும் பிறப்பித்துள்ளார். இதை ஏற்று, தமிழக அரசு விதிகளை உருவாக்கவேண்டும். அது தொடர்பான சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதன்பின்னர் தான் தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    நீதிபதிகள்:- சரி இருதரப்பினரும் முதலில் பதில் மனுவை தாக்கல் செய்யுங்கள். விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

    இவ்வாறு வாதம் நடந்தது.

    உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் தடை விதிக்கவில்லை என்பதால், உள்ளாட்சி தேர்தல் ரத்து உத்தரவு மேலும் 4 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×