search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
    X

    தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

    தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.



    தமிழிசை சவுந்தரராஜன்

    திருப்பூர்:

    பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்வதுடன் உள்ளாட்சி தேர்தலை பலம் பொருத்திய கட்சியாக எதிர்கொள்வது குறித்தும், காவிரி நீரை நியாயமான முறையில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு உறுதியாக பெற்று தருவதற்கான அத்தனை முயற்சிகளையும் பா.ஜனதா மேற்கொள்ளும்.

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக உயர்மட்ட தொழில்நுட்ப குழு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி நிச்சயமாக தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும் அளவுக்கு தீர்ப்பு இருக்கும். ஏனென்றால் உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை அமைத்தது மத்திய அரசு தான்.

    சட்டத்திட்டங்களின்படி நடைமுறை நடந்து கொண்டிருக்கும்போது, ரெயில் மறியல் போராட்டம் என சில அரசியல் கட்சிகள் காவிரி பிரச்சினையை தங்கள் லாபத்துக்கு பயன்படுத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சியை கூட காங்கிரசும், தி.மு.க.வும் எடுக்கவில்லை. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அரசாணையில் பதிவு செய்யப்பட்டது கூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து பெறப்பட்டது தான்.

    கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்து விடவில்லையென்றால் அது மிகவும் தவறான போக்காக அமையும். தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது மாநில செயற்குழுவின் தீர்மானமாகும்.

    தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கட்சி போட்டியிடுகிறது. நடுநிலையாக தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

    கட்சியின் மாநில செயற்குழுவில் தஞ்சாவூருக்கு பொதுச்செயலாளர் முருகானந்தம், திருப்பரங்குன்றத்துக்கு பொதுச்செயலாளர் சரவணபெருமாள், அரவக்குறிச்சிக்கு சிவசாமி ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×