search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பு ஏற்றார்
    X

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பு ஏற்றார்

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக திருநாவுக்கரசர் நேற்று பொறுப்பேற்றார். எம்.ஜி.ஆர்., ராஜீவ்காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து, முன்னாள் தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக முன்னாள் மத்தியமந்திரி திருநாவுக்கரசரை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு ஆகியோரை அவர்களது இல்லத்தில் திருநாவுக்கரசர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    பின்னர் அவர் நேற்று மாலை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சத்தியமூர்த்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து அவர் மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, எச்.வசந்தகுமார், விஜயதரணி, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.கே.அகமது அலி, ரவிராஜ், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, “நான் திருநாவுக்கரசர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறேன். நம்முடைய குறிக்கோள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முதலிடத்தில் கொண்டு வருவது தான். இதற்காக எத்தனை போராட்டம் நடத்தினாலும் அவருக்கு நான் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

    திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    ப.சிதம்பரம், ரஜினிகாந்த் உள்பட எல்லோரும் எனக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். நான் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை. எதிரிகளே இல்லாமல் நான் தமிழக காங்கிரஸ் கட்சியை நடத்தி செல்வேன். எம்.ஜி.ஆர். எனக்கு அடையாளம் கொடுத்தார். 50 ஆண்டுகாலமாக பொது வாழ்வில் இருக்கிறேன். நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்த்த உடனே எனக்கு பதவி தந்துவிடவில்லை. 2009-ம் ஆண்டு முதல் 2013-வரை கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்து உள்ளேன். அதன்பிறகு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் சூழ்நிலைக்கேற்ப தலைவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். இருக்கின்றவரை பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். ஒரு இயக்கத்தின் வளர்ச்சி தனிநபர் கையில் கிடையாது. கூட்டு முயற்சியால் தான் வெற்றிபெற முடியும். எந்த முடிவையும் நான் தனித்து எடுக்க மாட்டேன்.

    3 மாதத்திற்கு ஒரு முறை சோனியாகாந்தி, ராகுல்காந்தியை அழைத்து தமிழகத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும். இனி வருங்காலம் எனக்கு உறக்கம் இல்லாத நாட்களாக இருக்கும். அனைவரையும் சம உரிமையுடன், அரவணைத்து செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் திருநாவுக்கரசர் தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவகம் சென்று, காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், கிண்டியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும், நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், எம்.ஜி.ஆர். நினைவகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், யானைகவுனியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×