என் மலர்

  செய்திகள்

  சென்னை, மதுரை, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டிடங்கள்-நவீன சிகிச்சை வசதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு
  X

  சென்னை, மதுரை, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டிடங்கள்-நவீன சிகிச்சை வசதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை, மதுரை, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் ரூ.854 கோடியில் கட்டிடங்கள்-நவீன சிகிச்சை வசதிகள் செய்யப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
  சென்னை:

  சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

  1. மதுரை, சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, பொது மருத்துவம், ‘வாஸ்குலர்’, ‘கார்டியோதொரசிக்’, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, சிறுநீரகம், காது மூக்கு தொண்டை மற்றும் குழந்தைகளுக்கென கூடுதல் அறுவை சிகிச்சை அரங்கங்கள் கட்டப்படும். ‘ஹைபிரிட்’ அறுவை அரங்கம், தலையீடு கதிரியக்க அறைகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்பு பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க தீவிர சிகிச்சை பிரிவு, இருதய கண்காணிப்பு, இமேஜிங் மையம் மற்றும் கலையரங்கம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளும் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும். இவை 356 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

  2. மதுரை, சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின், நவீன அறுவை சிகிச்சை மையத்தில் அறுவை அரங்கத்திற்குத் தேவையான அறுவை சிகிச்சை விளக்கு, ‘சிஆர்ம்’, ‘எக்ஸ்ரே’, ‘எண்டோஸ்கோபி’ கருவிகள், ‘எம்.ஆர்.ஐ ஸ்கேன்’, ‘சிடி ஸ்கேன்’, தீவிர சிகிச்சைப் பிரிவு உடன் கூடிய பயிற்சி நிலையம், மயக்கவியல் பணி நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்படும். இவை 497 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

  3. சேலம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில், ‘இமேஜிங்’ துறை ஊடுகதிர் பிரிவுக்கு ‘சிடி ஸ்கேன்’, ‘மேமோகிராபி’ போன்ற கருவிகள், அறுவை அரங்கத்திற்கு, ‘ஆபரேடிங் மைக்ராஸ்கோப்’, ‘அல்ட்ராசவுண்ட்’, ‘சி-ஆர்ம்’, ‘எக்ஸ்ரே’ மருத்துவக் கருவிகள் போன்றவை 75 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். ஈரோடு, திருப்பூர், கடலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் பெரியகுளம் ஆகிய ஏழு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், ‘இமேஜிங்’ துறைக்கு ‘சிடி ஸ்கேன்’, ‘எண்டோஸ்கோபி’ போன்ற கருவிகள் வழங்கப்படும். இரத்த கூழ்ம பகுப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும். மேலும் அறுவை அரங்கத்திற்கு ‘சி-ஆர்ம்’ கருவி, ‘எக்ஸ்ரே’ மயக்கவியல் பிரிவுகள் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். அதாவது, மேற்கண்ட 14 மருத்துவமனைகளுக்கு 153 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்படும்.

  4.சென்னை ஆவடி, சேலம்-மணியனூர், திருப்பூர்-வேலம்பாளையம் மற்றும் திருநெல்வேலி- கண்டிகைபேரி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு, குழந்தைகள் நலம், காது மூக்கு தொண்டை மற்றும் கண் மருத்துவம், அவசரகால பிரிவு, சிசேரியன் பிரிவு ஆகிய துறைகளின் கட்டட வசதிகள் 80 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இந்த மருத்துவமனைகளுக்கு படுக்கைகள், அறுவை சிகிச்சை மேஜைகள், அறுவை அரங்கத்தில் மயக்கவியல் கருவிகள், புறநோயாளிகள் பிரிவில் பல் மருத்துவப் பிரிவுகள், கார்டியோடோக்கோகிராபி ‘ரேடியண்ட் வார்மர்’, ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையம், நோயுள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு ‘வெண்டிலேட்டர்’, கட்டில்கள், ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ கருவி, ‘இமேஜிங்’ துறைக்கு ஊடுகதிர் கருவி போன்ற மருத்துவக் கருவிகள், 51 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். அதாவது, 131 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் இந்த மருத்துவமனைகள் வலுப்படுத்தப்படும்.

  5. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய்சேய் நலம், விபத்து காய சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, பரிசோதனை வசதிகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற பிரிவுகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கான நவீன மருத்துவ கருவிகள் வழங்கி வலுப்படுத்தப்படும். இதற்காக 122 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

  6. அரசு மருத்துவமனைகளையே பெரிதும் நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள், தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் 968 கோடி ரூபாய் செலவில் புதிய உபகரணங்கள் பல்வேறு மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு இதய நோய் உள்ளதா என்பதை கண்டறிவதற்காக செய்யப்படும் ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனைக்காக வசதி தற்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; ஆகிய 5 இடங்களில் மட்டுமே உள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடப்பு ஆண்டில் கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவ மனை ஆகிய 6 மருத்துவ மனைகளின் இதய துறைக்கு ‘கேத்லேப்’ கருவிகள் 42 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கி, இதய ஒப்புயர்வு மையங்களாக உயர்த்தப்படும்.

  7. குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இறப்பு விகிதம் குறைவாக உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 2010ல் 1,000 உயிருள்ள குழந்தை பிறப்புகளுக்கு 24 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் தற்போது 20 ஆக குறைந்துள்ளது. இதனை மேலும் குறைக்க எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மையங்களுக்கு 7 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலும், 22 மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் மற்றும் 6 அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு, 7 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவிலும் புதிய உபகரணங்கள் வழங்கப்படும். இந்த திட்டங்களுக்கு மொத்தம் 14 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

  8. குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு பச்சிளம் குழந்தை பராமரிப்பு ‘சிமாங்க்’ மையங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பெரும் பங்காற்றி வருகின்றன. ஏற்கனவே இயங்கி வரும் 55 ‘சிமாங்க்’ மையங்களின் மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றிற்கு 8 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

  9. தமிழ்நாட்டில், ரத்தம் தேவைப்படும் நபர்களுக்கு போதுமான பாதுகாப்பான தரம் வாய்ந்த ரத்தம் வழங்க அரசு மருத்துவ நிலையங்களில் 87 அரசு ரத்த வங்கிகளும், 363 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 20 மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலுள்ள ரத்த வங்கிகள் என 40 ரத்த வங்கிகளுக்கு கூடுதல் உபகரணங்கள் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

  10. கிராமப்புற மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவை வழங்குவதில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை உலக வங்கி உள்ளிட்ட பல அமைப்புகள் பாராட்டி உள்ளன. நடப்பாண்டில், முன்னோடித் திட்டமாக கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 5 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் துவங்கப்படும்.

  11. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ‘டயாலிசிஸ்’ செய்யும் வசதிகள் உள்ளன. இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 31 இரண்டாம் நிலை மருத்துவமனைகளுக்கு தலா 2 ‘டயாலிசிஸ்’ கருவிகள் 5 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

  12. மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 3 மாநகராட்சிகளிலுள்ள 15 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கும் பெரம்பலூர், பண்ருட்டி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அருப்புக்கோட்டை, திருவாரூர், ஆவடி ஆகிய நகராட்சிகளிலுள்ள 8 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கும் புதிய கட்டடங்கள் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும். மேலும், கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 8 மாநகராட்சிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்படும்.

  13. தமிழக அரசு செயல்படுத்தி வரும் 108 அவசர கால ஊர்தி சேவை, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றி வருகிறது. எனவே இந்த திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் செயல்பட்டு வரும் 50 ஆம்புலன்சுகளுக்கு பதிலாக, 50 புதிய ஆம்புலன்சுகள் 4 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

  14. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவாக உள்ளது. கருவுற்ற தாய்மார்களை பிரசவத்திற்கு மருத்துவமனைகளுக்கு அழைத்து வருதல் மற்றும் பிரசவத்திற்குப் பின் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லுதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. பிரசவங்கள் அதிக எண்ணிக்கையில் நிகழும் 20 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 20 புதிய வாகனங்களும்; தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பழநி, திருநெல்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களிலுள்ள தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் 8 நகரும் மருத்துவக் குழுக்களும் 2 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

  15. முதியோர் நலனில் எனது தலைமையிலான அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் 126 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் தேசிய முதியோர் நிலையம் அமைக்க கட்டடப் பணி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் விழுப்புரம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

  16. மாவட்ட மன நலத் திட்டம் தற்போது தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் எஞ்சி உள்ள 7 மாவட்டங்களான அரியலூர், நீலகிரி, தஞ்சாவூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கென 6 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

  17. தற்போது மது போதை மாற்று சிகிச்சை மையங்கள் 17 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் கொண்ட மது போதை மாற்று சிகிச்சை மையங்கள் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

  18. புற்றுநோய் கண்டறியும் பி.இ.டி. ஸ்கேன் வசதி 15 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நிறுவப்படும்.

  19. தமிழ்நாட்டில், வட்டார அளவில் செயல்படும் அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டணமில்லா “அம்மா ஆரோக்கியத் திட்டம்” என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்” மற்றும் மகளிருக்கு என்று தனியாக “அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்” தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் நடப்பாண்டில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

  20. இந்திய முறை மருத்துவத்திற்கு எனது தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நடப்பாண்டில் அரசு யோகா மற்றும் இயற்கை வைத்தியக் கல்லூரி மாணவியர்களுக்காக 11 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.

  21. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் 22 ‘நல மையங்கள்’, 10 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘ஆயுஷ்’ பிரிவு ஏற்படுத்துதல், ஏற்கனவே செயல்பட்டு வரும் 475 ‘ஆயுஷ்’ மருத்துவ நிலையங்களுக்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் 19 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

  தற்போது நான் அறிவித்துள்ள இந்த திட்டங்களால் அரசு மருத்துவமனைகள் மேலும் சிறந்து விளங்குவதோடு, ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவ சேவை பெற வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×