என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்தப்படம்.
    X
    கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியபோது எடுத்தப்படம்.

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச்செய்யவேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

    சோதனைகளை தவிடுபொடியாக்கி உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
    ஈரோடு:

    சட்டசபை எதிர்கட்சி தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஈரோடு வந்தார்.

    ஈரோடு சம்பத்நகர் கொங்கு கலையரங்கில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    இவ்வளவு கூட்டத்தை இங்கே பார்க்கும் போது பல கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் சேரும் ஒரு சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. ஒரு மாநாடு போல் உள்ளது. தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர முடியாவிட்டாலும் அவர்களை தட்டிக்கேட்கும் உரிமையை நாம் பெற்றுள்ளோம்.

    அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆகிறது. ஆனால் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச தொடர்ந்து அனுமதி மறுக்கிறார்கள். கவர்னர் உரை மீதான விவாதமும் முடிந்து மானியக்கோரிக்கை நடந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் நாங்கள் (தி.மு.க.வினர்) மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்து வருகிறார்.

    தி.மு.க,வைப் பொருத்தவரை நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக உள்ளது.

    இன்று தி.மு.க.வை தேடி இளைஞர்கள் துடிப்புடன் ஆர்வத்துடன் வந்து இணைகிறார்கள். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் தி.மு.க.தான் என அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இப்படி தினமும் இளைஞர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும்போது, நாம் ஆட்சிக்கு வர இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டுமா? இப்போதே தி.மு.க ஆட்சிக்கு வந்து விடுமா? என தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

    அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து 3 மாதமாகியும் எந்த திட்டமும் செயல்படவில்லை. எரிவாயு குழாய் திட்டத்தால் 6 மாவட்டங்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது. சட்டசபையில் இது குறித்து நான் பேசியுள்ளேன்.

    திருப்பூர் மாணவன் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்தார். இவர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர்கள் கூறுகிறார்கள். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்று அவரது பெற்றோர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மதுரை அவனியாபுரத்தில் மாணவர் லெனின் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் அவர் கல்விகடன் வாங்கியிருந்த வங்கியிலிருந்து அச்சுறுத்தல் வந்ததுதான் காரணம். மேலும் அவரது படிப்பு சான்றிதழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் கலைஞர் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து 3மாதமாகியும் அ.தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரஉள்ளது. இந்த தேர்தலில் எந்த எதிர்ப்புகள் வந்தாலும் சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கி தி.மு.கவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    முன்னதாக விழாவுக்கு தி.மு.க. மாநில துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் முத்துசாமி வரவேற்றார்.

    விழாவில் தி.மு.கவில் இணைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகள் வழங்கினார்.
    Next Story
    ×