என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: 102 பேர் கைது ராஜேஷ்லக்கானி பேட்டி
    X

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: 102 பேர் கைது ராஜேஷ்லக்கானி பேட்டி

    வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பாக இதுவரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ராஜேஷ்லக்கானி கூறினார்.
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

    தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளதையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

    1221 வாக்குச்சாவடிகள் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. இதில் 18 வாக்குச் சாவடிகளுக்கு வாகனம் மூலம் ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை. மாற்று ஏற்பாடு செய்து அவற்றை அனுப்பி வருகிறோம்.

    மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை தள்ளி வைத்ததற்கான காரணங்களை தெளிவாக விளக்கி கூறி உள்ளோம்.

    திருப்பூரில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி உரிய ஆவணங்களை ஒப்படைத்து உரிமை கோரி உள்ளது. இதன் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    உளுந்தூர்பேட்டை பா.ம.க. வேட்பாளர் பாலு தேர்தல் அதிகாரியை மிரட்டி பணத்தை தலையில் வீசிய புகார் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தேர்தலையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளில் மது வினியோகம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். பூத் ஏஜெண்டுகள் வாக்குச் சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை.

    வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பாக இதுவரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×