என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கல்?: அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் 7 மணி நேரம் அதிரடி சோதனை
    X

    வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கல்?: அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் 7 மணி நேரம் அதிரடி சோதனை

    வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் நகராட்சி முன்னாள் தலைவரும், மாநகராட்சி 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலருமான வக்கீல் ராஜேந்திரன் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோவை வருமானவரித்துறை இணை இயக்குனர் ராணி காஞ்சனா மற்றும் தேர்தல் பார்வையாளர் அபிஷேக், தேர்தல் பறக்கும் படை அதிகாரி யோகானந்தம் ஆகியோர் இரவு 7 மணியளவில் ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றனர்.

    அப்போது அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். இதையடுத்து அதிகாரிகள் ராஜேந்திரனுக்கு போன் செய்தனர். அப்போது தான் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள் அவரை உடனடியாக வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    அவரது வீடு மற்றும் தோட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர்.

    மேலும் பா.ஜனதா தொண்டர்களும் இந்த தகவல் பற்றி கேள்விப்பட்டு அங்கு திரண்டனர். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

    உடனடியாக பேரூர் டி.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், துடியலூர் இன்ஸ்பெக்டர் வெற்றி வேந்தன் மற்றும் சிறப்பு- படை போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 2 கட்சி தொண்டர்களையும் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் போலீசார் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பணி மேற் கொண்டனர். அதிகாரிகள் ராஜேந்திரனின் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இன்று அதிகாலை 2 மணி வரை சுமார் 7 மணி நேரம் நடந்தது.

    சோதனை முடிந்து வெளியே வந்தவருமான வரித்துறை இணை இயக்குனர் ராணி காஞ்சனாவிடம் கேட்ட போது அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. பின்னர் கவுன்சிலர் ராஜேந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, மாற்று கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தினர். நான் வீட்டில் ரூ.3 1/2 லட்சம் வைத்து இருந்தேன். இதில் ரூ.1 1/2 லட்சத்துக்கு முறையான ஆவணங்கள் இருக்கிறது. மீதியுள்ள 2 லட்சம் எனக்கு வாடகை மூலம் கிடைத்தது, ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை. எனவே 2 லட்சத்துக்கும் இன்று காலை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்து ஆவணங்களை காட்ட வேண்டும் என்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நடந்த சோதனையால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
    Next Story
    ×