என் மலர்
செய்திகள்

நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு முறையான திட்டங்கள் கிடைக்கும்: ஜி.கே.வாசன் பிரசாரம்
சிவகங்கை:
சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திறந்த வேனில் நின்றபடி காளையார்கோவில் பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், நேர்மையான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்போது தான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் முறையாக கிடைக்கும்.
அதற்கு ஏற்ற நல்ல அரசாங்கம் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி என்று தான் நான் கூறுகிறேன். மதுவில்லா தமிழகம், மாசு இல்லா சுற்றுச்சூழல், ஊழல் இல்லாத வெளிப்படையான அரசு, சாதிகளற்ற தமிழ் சமுதாயம், மோதல் இல்லாத மதச்சார்பற்ற அரசு, வணிகமாகாத கல்வி, கொள்ளை போகாத இயற்கை வளம், கிரானைட் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி, கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி, ஆகியவற்றை நாங்கள் வழங்குவோம்.
விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். தொழிலாளர் நலன் காக்கும் அரசாக நாங்கள் செயல்படுவோம். பின்தங்கிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைத்து படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம். கடந்த 3 நாட்களிலே தமிழக மக்களின் மனநிலை, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் கூட்டாட்சி ஏற்படுத்த வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இந்தமுறை மக்கள் விரும்பும் வலுவான கூட்டணியை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தமுறை வாய்ப்பை நழுவவிட்டால் ஊழலில் இருந்து தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.






