search icon
என் மலர்tooltip icon

  பெண்கள் உலகம்

  மறுமணத்தின் மறுபக்கம்
  X
  மறுமணத்தின் மறுபக்கம்

  மறுமணத்தின் மறுபக்கம்: பெண்களின் தவிப்புகளும்.. தவறுகளும்..

  மறுமண வாழ்க்கை வெற்றியடைய பிள்ளைகளின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதனால் பெண்கள் மிகுந்த நிதானத்தோடும், பக்குவத்தோடும் புதிய துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  “நான் இப்போது அடுத்தவர்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைபோல் இருந்துகொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையை பற்றிய முடிவை என்னால் எடுக்கமுடியவில்லை. எனக்காக நான் வாழக்கூட அடுத்தவர்களிடம் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. குடும்பத்தில் உள்ள பலர், அவர்களது விருப்பங்களை என் மீது திணித்து அவர்களுக்கு தக்கபடி என்னை வாழச்சொல்கிறார்கள். என் உணர்ச்சிகளை யாரும் புரிந்து கொள்ளமறுக்கிறார்கள்” என்று கண்கலங்க சொன்ன பெண், நிறைய படித்த டாக்டர். சிகிச்சையில் ஏராளமானவர்களை சந்தித்தவர். சமூகத்தின் எண்ண ஓட்டங்களையும் நன்றாக அறிந்தவர்.

  இவருக்கு 27 வயதில் திருமணமாகி இருக்கிறது. இப்போது 35 வயது. இரண்டு குழந்தைகளின் தாய். காதலித்து திருமணம் செய்திருக்கிறார். விபத்து ஒன்றில் கணவர் இறந்திருக்கிறார்.

  இறந்த தனது கணவரின் பெருந்தன்மைகளை விளக்கி கண் கலங்கியவர், “எனதுகணவர் மிகச் சிறந்தமனிதர். எனது உணர்ச்சிகளுக்கும், எண்ணங்களுக்கும் மிகுந்தமதிப்பு அளித்தவர். எல்லாவிஷயத்திலும் நானும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்த மிக உன்னதமான மனிதர் அவர். அப்படிப்பட்டவரை நான் இழந்துவிட்டு, சுயநலமிக்க அவரது குடும்பத்தினர் கைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

  அதாவது இவரது கணவர் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. கணவரும், இவரும் சேர்ந்து நடத்திய ‘கிளினிக்’கை இப்போது இவர் தனி ஆளாக நடத்திக்கொண்டிருக்கிறார். அதில் சில நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. அதோடு குழந்தைகளை கவனிக்கவேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இவருக்கு குடும்பச் சொத்துக்களும் உள்ளன. அதை நிர்வகிப்பதற்கும் அதிகமெனக்கெட வேண்டியிருக்கிறது. கணவர் இறந்துபோய்விட்டாலும் மாமியார் வீட்டிலேயே குழந்தைகளோடு வசித்துவருகிறார்.

  தனி ஆளாக வாழும் அவர் வாழ்க்கைத் துணைஅவசியம் என்று கருதி மறுமணம் செய்ய விரும்புகிறார். ஆனால் கணவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருவது, இந்த டாக்டருக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  “இப்போது காலம் முன்னேறிவிட்டது. சராசரி மனிதர்கள்கூட கணவரை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்துவைத்து அவளது வாழ்க்கையில் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும் உருவாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் முதியோர்களான எனது மாமனாரும், மாமியாரும் நான் மறுமணம் செய்துகொள்ளவேகூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். எனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், எனது உணர்ச்சிகளையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை” என்று வேதனைப்பட்டார்.

  கணவரை இழந்தசோகம் தொடக்கத்தில் இவரையும் கடுமையாக பாதித்திருக்கிறது. ஒருவருடமாக அதில் இருந்து மீளமுடியாமல் தவித்திருக்கிறார். பின்பு அவர் மீண்டு வந்து ‘கிளினிக்’கை தொடர்ந்து நடத்த முன் வந்திருக்கிறார். அதன் பின்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளை கருத்தில்கொண்டு தனக்கு வாழ்க்கைத் துணைஅவசியம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதுபற்றிய பேச்சை புகுந்த வீட்டினர் எடுப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்க அவர்களோ, அமைதியாக இருந்திருக்கிறார்கள்.

  “எனது மறுமணம் பற்றி மாமனாரும்-மாமியாரும் சிந்திக்கவே இல்லை என்பதை நான் தெரிந்துகொண்டு, அவர்களிடம் பேச எனது தந்தையை அனுப்பினேன். எனது தந்தை, எனக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியதும் எனது மாமியார், ஏதோகேட்கக் கூடாத விஷயத்தை கேட்டதுபோல் காதுகளை பொத்திக்கொண்டு எனது அப்பாவை வசைபாடியிருக்கிறார். ‘இனிமேல் இந்த எண்ணத்தோடு எங்கள் வீட்டு பக்கமே வராதீர்கள். எங்கள் மகனோடு பல வருடங்கள் உங்கள் மகள் வாழ்ந்திருக்கிறாள். இவள் மறுமணம் செய்துகொண்டால், என் மகன் ஆத்மா சாந்தியடையாது என்று வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்கள். அவர்கள் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்றவர் கணவரின் துணையின்றிதான் தனி மனுஷியாக இருப்பதால், தனக்கு ஏற்பட்டிருக்கும் சில அச்சுறுத்தல்களையும் குறிப்பிட்டார்.

  அவரது மாமனார், மாமியார் இருவரையும் அழைத்தேன். வந்தார்கள். படித்தவர்களாகத்தான் இருந்தார்கள். ஒரே மகனை பெற்று வளர்த்து விபத்தில் பறிகொடுத்து விட்டதாக அழுது புலம்பினார்கள். மகனின் குழந்தைகள் இருவர் மீதும் தாங்கள் உயிரையே வைத்திருப்பதாக சொன்னார்கள்.

  அவர்கள், தங்கள் மருமகள் மறுமணம் செய்யக்கூடாது என்பதற்கு முக்கிய காரணமாக இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை குறிப்பிட்டார்கள். ‘மறுமணத்தில் கிடைக்கும் வாழ்க்கைத் துணைவன் நல்லவனாக இருக்கமாட்டான். அவனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அதனால் தான் நாங்கள் மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ என்பது அவர்களது வாதமாக இருந்தது.

  அவர்களிடம் தொடர்ந்து பேசியபோது அவர்களது தூரத்து உறவுப்பெண் ஒருத்திக்கு மறுமணம் நடந்திருப்பதும், ஆனால் அந்தபெண்ணின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை என்பதும் தெரியவந்தது. அதனால் மறுமணத்தை பற்றி அவர்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இன்னொரு விஷயம், தனது மகன் இருந்த இடத்தில் இன்னொரு நபரை வைத்து பார்க்க அவர்கள் மனதும் இடந்தரவில்லை. இந்த இரு காரணங்களையும் மனதில் வைத்துக்கொண்டு, ‘குழந்தைகளின் எதிர்காலம்’ என்ற ஒரு விஷயத்தை மட்டும் பூதாகரமாக்கி மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

  ‘மறுமணம் என்றாலே அது வெற்றியடையாது. அது தவறானது’ என்ற எண்ணங்களைஅவர்களது மனதில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை முதலில் மேற்கொண்டேன். அந்த எண்ணம் அவர்களிடம் இருந்து அகன்றால் மட்டுமே, அவர்களுக்கு மறுமணத்தின் நிறைகுறைகளை அலசும் தெளிவான சிந்தனை உருவாகும், அவர்களுக்கு தெரிந்து ஒரு மறுமணம் தோல்வியடைந்து விட்டதால், எல்லா மறுமணமும் தோல்வியடைந்து விடும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மறுமணம் செய்த எவ்வளவோ பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரியவைத்துவிட்டு, அவர்களை அந்த பெண் டாக்டரின் மனநிலையிலும் - சூழ்நிலையிலும் இருந்து அந்த பிரச்சினையை அணுகும்படி கூறினேன். வாழ்க்கைத் துணையோடு வாழ்பவருக்கு, வாழ்க்கைத் துணையை இழந்தவரின் வலியை புரியவைத்தேன்.

  பேரக்குழந்தைகள் மீது ஒரு தாத்தாவிற்கும், பாட்டிக்கும் இருக்கும் அக்கறையைவிட தாய்க்கு தன் குழந்தைகள் மீது இருக்கும் அக்கறை குறைவானதல்ல என்பதை அந்த முதிய தம்பதிக்கு பலமுறை எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டியிருந்தது.

  வசதிவாய்ப்புகள் நிறைந்த, அழகான பெண் ஒருவர் தனிமையில் வாழ்வது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை தனதுகோணத்தில் இருந்து அந்த டாக்டர் தனது மாமியாருக்கு விளக்கினார். தனி மனிதர்கள் ஒரு சிலரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான சில நெருக்கடிகளையும் மனந்திறந்து சொன்னார். 35 வயதான பெண் ஒருவருக்கு ஏற்படும் இயற்கையான உடல் உணர்ச்சிகளையும், தேவைகளையும் பக்குவமாக பாராட்டும் விதத்தில், எடுத்துவைத்தார்.

  இரண்டு, மூன்று கட்ட கவுன்சலிங்குக்கு பிறகு தான் இந்த பெண் டாக்டரின் மனோநிலை, சமூகசூழல், தனிமனித உணர்ச்சிகள், பாதுகாப்பு பற்றி எல்லாம் அந்த முதிய தம்பதிகளுக்கு புரிந்தது. பின்பு மறுமண பிரச்சினையை மருமகளின் மனநிலையில் இருந்து சிந்தித்துப்பார்க்க அவர்கள் முன்வந்தார்கள்.

  இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த பெண் டாக்டர் இதில் மிக நிதானமாகவும், பக்குவமாகவும் நடந்துகொண்டார். இந்த முதிய தம்பதிகளை பொறுத்தவரையில் அவர்கள் டாக்டரின் முன்னாள் மாமனார்-மாமியார் ஆகிவிட்டார்கள். அவர்களை புறக்கணித்துவிட்டு தான் விரும்புகிறவரை மறுமணம் செய்து கொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஆனாலும் அந்த உரிமையை சுட்டிக்காட்டாமல், அவர்களுக்குரிய மரியாதையை கொடுத்து அவர்கள் விரும்பும் ஒருவரையே தான் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். அதற்காக சில வருடங்கள் காத்திருக்கவும் அவர் தயாராக இருந்தார்.

  “உங்கள் மகன் என் உயிரோடும், உணர்வோடும் கலந்துவிட்டவர். அவரது இடத்தை என் வாழ்க்கையில் இனி யாராலும் பூர்த்திசெய்ய முடியாது. ஆனாலும் எனது எதிர்காலத்திற்காகவும், எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் எனக்கு வாழ்க்கைத் துணை மிக அவசியம். எனக்கு பொருத்தமான ஒருவரை நீங்களே தேர்ந்தெடுத்து தர வேண்டும்” என்று அவர், மாமியாரின் கைகளை பற்றிக்கொண்டு நெகிழ்ச்சியுடன் கூறினார். அதன் பின்புதான் அந்த மருமகளை தனது மகள் போல் பாவிக்க மாமியார் முன்வந்திருக்கிறார். இப்போது அந்த பெண் டாக்டரின் வாழ்க்கையில் (மறுமணம் என்ற) வசந்தம் வீசும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

  கணவனும்-மனைவியும் ஒன்றிணைந்து செயல்பட்டால் திருமண வாழ்க்கையை வெற்றியடையச் செய்துவிடலாம். ஆனால் மறுமண வாழ்க்கை வெற்றியடைய பிள்ளைகளின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதனால் பெண்கள் மிகுந்த நிதானத்தோடும், பக்குவத்தோடும் புதிய துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  - விஜயலட்சுமி பந்தையன்
  Next Story
  ×