என் மலர்

  பெண்கள் உலகம்

  சவாலான பணியில் சாதிக்கும் பெண் போலீசார்
  X

  சவாலான பணியில் சாதிக்கும் பெண் போலீசார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்பம், பணியிடம், கல்விக்கூடம் என்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
  • தமிழகத்தில் கடந்த 1973-ம் ஆண்டு பெண் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டனர்.

  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலை மாறி இப்போது பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை... அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள்.

  இந்த சமுதாயத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு போலீசாருக்கு இருக்கிறது. மேலும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி செல்லும் இடமாக போலீஸ் நிலையம் இருக்கிறது.

  குடும்பம், பணியிடம், கல்விக்கூடம் என்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அது பற்றி அவர்கள் ஆண் போலீசாரிடம் தெரிவிப்பதில் தயக்கம் இருக்கும். ஆனால் அந்த இடத்தில் பெண் போலீசார் இருந்தால் பெண்கள் தங்களின் பிரச்சினைகளை மனம் திறந்து சொல்ல முடியும். அதை பெண் போலீசாரும் கனிவுடன் கேட்டு தீர்வு காண வாய்ப்பு ஏற்படும்.

  பெண் போலீசார்

  எனவே தான் தமிழகத்தில் கடந்த 1973-ம் ஆண்டு பெண் போலீசார் பணியில் நியமிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 1993-ம் ஆண்டு தமிழகத்தில் மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் காவல்துறையில் பெண்களை தேர்வு செய்வது அதிகரித்தது.

  தற்போது தமிழக காவல்துறையில் ஐ.ஏ.எஸ். முதல் காவலர் வரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் 1973-ம் ஆண்டு தொடங்கியதால் இந்த ஆண்டுடன் காவல் துறையில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டு 50 ஆண்டு ஆகிறது. பொன்விழா ஆண்டில் பயணிக்கும் மகளிர் போலீசார் சவாலான பணியை ஏற்று சாதனை படைத்து வருகிறார்கள்.

  சட்டம் ஒழுங்கை பராமரித்தல், குற்றவாளிகளை பிடித்தல், போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல், கோர்ட்டு பணி என்று காவல் துறையில் இருக்கும் அனைத்து பணிகளையும் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் பெண்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

  இது தொடர்பாக காவல் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பெண்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

  வரப்பிரசாதம்

  போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி :-

  காவல்துறையில் இடம் ஒதுக்கியது பெண்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். இது தினமும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துறை ஆகும். அதை சவாலாக ஏற்று பெண்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர். போலீஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள், தங்களின் பிரச்சினைகளை ஆண் போலீசிடம் சொல்ல தயங்குவார்கள். தற்போது பெண் போலீசார் இருப்பதால், எவ்வித தயக்கமும் இன்றி பெண்கள் தங்களின் பிரச்சினைகளை கூறி நிவாரணம் பெற்று செல்கிறார்கள். பெண் போலீசார் இருப்பதால் தான் பாலியல் புகார்களை பெண்கள் தயக்கம் இன்றி கூறமுடிகிறது. அதன் மூலம் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்படுகிறது. போலீசாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெண்க ளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். அதை ஒவ்வொரு பெண் போலீசாரும் நினைத்து சமுதாயத்துக்கு நல்ல முறையில் பணியாற்ற வேண்டும்.

  சாதிக்க முடிகிறது

  சாய்பாபாகாலனி உதவி கமிஷனர் பஷினா பீவி:-

  காவல்துறை என்பது மிகவும் சவாலான பணி. அதில் பெண்கள் பணியாற்றுவது மிகவும் சவாலானது. குற்றவாளிகளை பிடிக்க செல் லும் தனிப்படையில் பெண் போலீசாரும் நியமிக்கப்படுகிறார்கள். எந்த பணியையும் ஒதுக்காமல் பெண்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு மற்ற போலீசாரும் உதவியாக இருக்கிறார்கள். இதன் மூலம் காவல் துறையில் அனைத்து பணிகளிலும் பெண்கள் சாதிக்க முடிகிறது. போலீஸ் சீருடையில் பெண்களுக்கு தனி மரியாதை உள்ளது. நான் சார்ந்து இருக்கும் சமுதாயத்தில் பெண்களை வெளியே அனுப்ப கூட யோசிப்பார்கள். அதையும் தாண்டி நம்மீது பெற்றோர் நம்பிக்கை வைத்து வெளியே அனுப்புகிறார்கள். அந்த நம்பிக்கை தான் சாதனை படைக்க வைக்கிறது.

  நமக்கு இருக்கும் பிரச்சினையை வெளியே காட்டாமல் நம்மை தேடி வரும் பொதுமக்களுக்கு உதவினாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். பணியில் இருக்கும் பெண் போலீசார் தங்களின் உடல் நலனிலும் கட்டாயம் அக்கறை காட்ட வேண்டும். நாம் நன்றாக இருந்தால்தான் சமுதாயத்துக்கு சேவையாற்ற முடியும். பெண் போலீசாருக்கு உள்ள வேலைப்பளுவை வீட்டில் இருப்பவர்கள் புரிந்து கொண்டு உதவியாக இருந்தால் மேலும் சாதிக்கலாம்.

  பெண்களுக்கு கிடைத்த பெருமை

  இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா:-

  முதலில் பெண் குற்றவாளிகளை கையாள பெண் போலீஸ் தேவைப் பட்டார்கள். பின்னர் குடும்பம், பாலியல் மற்றும் பெண் கைதிகளை கையாள பெண் போலீசார் பணி அமர்த்தப்பட்டனர். அனால் தற் போது அனைத்து பணிகளையும் பெண் போலீசார் செய்து வருகி றார்கள். குறிப்பாக முதல்-அமைச்சர் பாதுகாப்பு தனிப்பிரிவிலும் பெண்கள் உள்ளனர்.

  போலீஸ் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். போலீசில் பெண் காவலர்கள் தேவையா என்ற கேள்வி முன்பு இருந்தது. ஆனால் தற்போது பெண் போலீஸ் இல்லாமல் முடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.. குறிப்பாக கோவை மாநகரத்தில் தொடங்கப்பட்டு உள்ள போலீஸ் அக்கா திட்டத்தில் பெண் போலீசார் சிறப்பாக பணியாற்றி கல்லூரி மாணவிகள் கூறும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்கள்.

  ஊக்கம் அளிக்கிறார்கள்

  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரிகா:-

  நான் கடந்த 1997-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தேன். பின்னர் பயிற்சி முடிந்து கோவைப்புதூரில் 4-வது பட்டாலியனில் பணியில் அமர்த்தப்பட்டேன். அங்கு பெண் போலீசை பணியில் அமர்த்தியது அப்போதுதான். அதற்கு முன்னர் மகளிர் போலீஸ் நிலையம், ஆயுதப்படையில் பெண் போலீசார் பணியாற்றினார்கள். 2000-ம் ஆண்டில் தான் முதன்முறையாக போக்குவரத்து பிரிவில் பெண் போலீசாக பணியமர்த்தப்பட்டேன். எனது பணிக்கு கணவர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறப்பாக பணி யாற்ற முடிகிறது. எனது பணியை பாராட்டி வக்கீல் சங்கம் விருது அளித்தது. நான் தைரியமாக பணியாற்ற காவல்துறைதான் காரணமாக இருக்கிறது.

  இவ்வாறு அவர்கள் கூறினார்.

  'தூணாக நின்று பெருமை சேர்க்கும் பெண் போலீஸ்'

  பொன் விழா கொண்டாடும் பெண் போலீசாரின் பெருமைகள் குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

  தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பு முக்கியமானதாகவும், பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் பெண் குற்றவாளிகளை விசாரித்து கைது செய்வது, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒரு சில பணிகளில்தான் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, புலன் விசாரணை செய்வது போன்ற பணிகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை. தற்போது அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீசாரின் பணி முக்கியமானதாக உள்ளது. அவர்கள் தமிழக போலீஸ் துறைக்கு தூண் போன்று உள்ளார்கள்.

  தமிழகத்தில் உள்ள 1,498 போலீஸ் நிலையங்களில் 503 போலீஸ் நிலையங்களுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பெண் இன்ஸ்பெக்டர்கள் தான் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் அவர்களது பணி சிறப்பாக உள்ளது.

  தமிழகத்தில் 228 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. அந்த போலீஸ் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 600 பெண்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனை பெண் போலீசார்தான் சிறப்பாக கையாண்டு உள்ளனர். கம்ப்யூட்டர் பிரிவில் பெரும்பாலும் பெண் போலீசார்தான் பணியாற்றி வருகிறார்கள். எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய பணிகளை கம்ப்யூட்டரில் அவர்கள்தான் பதிவு செய்கிறார்கள்.

  ஆக, சட்டம்-ஒழுங்கு பிரிவில் இருந்து முக்கியமான நிர்வாக பணிகளிலும் பெண் போலீசாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Next Story
  ×