என் மலர்
பெண்கள் உலகம்

அலுவலக பணியில் சுறுசுறுப்பை அதிகரிக்க வழிமுறைகள்
- வேலை செய்யும்போது எளிய பயிற்சிகளை இணைத்துக் கொள்ளுங்கள்.
- அலுவலகத்தில் லிப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏற பழகுங்கள்.
வங்கி பணி முதல் ஐ.டி. நிறுவனங்கள் வரை இளைஞர்கள் பெரும்பாலும் அமர்ந்தே வேலை செய்யும் நிலை உள்ளது. இருக்கையில் நீண்ட நேரம் அசைவு இல்லாமல் அமர்ந்து வேலை செய்வது உடல் பருமன், தசை வலி, இதய பிரச்சனை போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அமர்ந்து செய்யும் வேலையில் சுறுசுறுப்பாக இருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்...
* இடைவெளி எடுங்கள்
ஒவ்வொரு 30 முதல் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நின்று நடைப்பயிற்சி செய்யுங்கள். தண்ணீர் எடுக்க செல்வது, கடைக்கு செல்வது, செல்போனில் நடந்து கொண்டே பேசுவது போன்ற குறுகிய நடைப்பயிற்சி செய்யலாம். இருந்த இடத்திலேயே `ஸ்ரெட்சிங்' எனப்படும் நீட்சி பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இந்த இடைவெளிகள் எடுப்பதை நினைவூட்ட, அலாரம் அல்லது பிட்னெஸ் செயலியை பயன்படுத்தலாம்.
சக ஊழியருடன் உரையாடுவதற்கு செல்போனை அல்லது மின்னஞ்சலை பயன்படுத்தாமல் நேரில் செல்லுங்கள். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் நடைபயிலும் வழக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சக ஊழியர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்கவும், கூட்டுப் பணிச்சூழலை மேம்படுத்தவும் உதவும்.
* பணி சூழல் அமைப்பு
அலுவலகத்தில் வேலை செய்யும் பணி சூழல் உங்களுக்கு ஏற்றவாறு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நாற்காலி, மேசை, மானிட்டர் ஆகியவற்றை சரியான முறையில் (கோணத்தில்) அமைத்து கொள்ளுங்கள். இது முதுகு மற்றும் கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.
* மேசை பயிற்சிகள்
வேலை செய்யும்போது எளிய பயிற்சிகளை இணைத்துக் கொள்ளுங்கள். அதாவது அமர்ந்திருக்கும்போது காலை தூக்குதல், கையை நீட்டுதல், மேசை புஷ்-அப்கள் போன்ற எளிய அசைவுகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கழுத்தை சுழற்றுதல், மணிக்கட்டை தளர்த்துதல் மற்றும் தோள்பட்டையை தளர்த்துதல் போன்றவை பதற்றத்தைக் குறைத்து, நீண்ட நேரம் இருக்கையில் இருந்து வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சனையைக் குறைக்கும்.
* நடக்க பழகுங்கள்
அலுவலகத்துக்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்ல முயற்சி செய்யுங்கள். பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் ஒரு நிறுத்தத்துக்கு முன்பாகவே இறங்கி மீதமுள்ள தூரத்தை நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். இது நாளுக்கு நாள் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதோடு, மன அழுத்த அளவையும் குறைக்கும்.
* படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்
அலுவலகத்தில் லிப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏற பழகுங்கள். இந்த சிறிய மாற்றம் அன்றாட உடல் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத் துடிப்பை சீராக்கவும், கால்களை வலுப்படுத்தவும் உதவும். உடற்பயிற்சியை வாழ்க்கையில் ஒருங்கிணைக்க இது ஒரு எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும்.
* ஆரோக்கியமான உணவு
நீரேற்றமாக இருங்கள். உடல் ஆற்றல் அளவை பராமரிக்க நட்ஸ், பழங்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். சரியான ஊட்டச்சத்தை உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியம், நல்வாழ்வு, கவனம் மற்றும் செயல்திறனையும் மேம்படுத்தும்.
* தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்
உங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், உடற்பயிற்சிகள் செய்வதை நினைவூட்டவும் செயலி மற்றும் கையில் அணியத்தக்க சாதனங்களை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்ப கருவிகள் நடைப்பயிற்சி இலக்குகளை அடையவும், உடலை தொடர்ந்து கண்காணிக்கவும் உதவும். இந்த சாதனங்கள் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஒரு உந்துதல் கருவியாகவும் அமையும்.
வீட்டில் உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறையுங்கள். லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, நடைப்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகளை செய்வது போன்றவற்றின் மூலம் நாள் முழுவதும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் மேம்படுத்தலாம்.






