என் மலர்

  பெண்கள் உலகம்

  கருப்பை சார்ந்த கட்டிகளும் சித்த மருத்துவமும்...
  X

  கருப்பை சார்ந்த கட்டிகளும் சித்த மருத்துவமும்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாதம் எனப்படும் வாயுவானது நம் உடலில் பல்வேறு இயக்கங்களை மேற்கொள்கிறது.
  • பெரும்பாலான கருப்பை தசைக்கட்டிகள் சாதாரணமான கட்டிகள் தான்.

  மாதவிடாய் காலங்களில் அளவுக்கு அதிகமான வயிற்று வலியை சமாளிக்க சிரமப்படும் பெண்களின் நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. என்னதான் வலி நிவாரணி மருந்துகள் அவர்களுக்கு துணை நின்றாலும், அவற்றை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடு முக்கியமானது. வலியை குறைக்க மருத்துவ முறைகள் இருப்பினும் வலிக்கான காரணம் அதை விட அவசியம். மேலும் வழக்கமாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக, மாதக்கணக்கில் கூட ஏற்படும் குருதி இழப்பு பெண்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இத்தகைய குறிகுணங்களுக்கு முக்கிய காரணமாக அமைவது கருப்பை சார்ந்த கட்டிகள்.

  பெண்களின் மாதவிடாய் தொந்தரவுகளில் முக்கிய இடத்தை வகிப்பது கருப்பை சார்ந்த கட்டிகள். மாதாந்திர பூப்பு கோளாறு, தாமதமாகும் கருத்தரிப்பு, மாதவிடாய் காலங்களில் அதிகமான வயிற்று வலி, அதிக ரத்தப் போக்கு போன்ற நோய்க்குறிகளின் காரணங்களை எதிர்கொள்ளும் பெண்கள், ஸ்கேன் பரிசோதனையில் அதிகம் உறுதி செய்வது கருப்பை சார்ந்த கட்டிகள் தான். சமீப காலங்களில் கிட்டத்தட்ட 20 முதல் 40 சதவீதம் பெண்களுக்கு கருப்பை சார்ந்த கட்டிகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கருப்பை சார்ந்த கட்டிகள் நவீன வாழ்வியல் மாற்றம், மாறிப்போன உணவு முறைகள் காரணமாக தற்போது உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுவது பெண்களின் ஆரோக்கிய சீர்கேட்டிற்கு உதாரணம்.

  கருப்பை சார்ந்த கட்டிகளில் பல வகைகள் இருப்பினும் பெரும்பாலான பெண்களுக்கு உண்டாவது 'பைப்ராய்டு' எனப்படும் தசைக்கட்டிகள் தான். சமீப காலங்களில் 30 முதல் 50 வயது வரை உள்ள நான்கில் ஒரு பெண்ணிற்கு இந்த தசைக்கட்டிகள் காணப்படுகிறது. அதிகரிக்கும் 'ஹிஸ்டரெக்டமி' எனும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை தற்காலத்தில் அதிகமாகி வரும் உண்மை பலரும் அறிந்ததே. அதற்கு முக்கிய காரணமாக இருப்பதும் கருப்பை தசைக்கட்டிகள் தான்.

  மாதவிடாய் காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு, அதிக வயிற்று வலி ஆகியவற்றுடன் இடுப்பு வலி, முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலச்சிக்கல் போன்ற இன்னும் பல குறிகுணங்களை கொண்டு பெண்களை துன்புறுத்தும் நோய் நிலையாக உள்ளது கருப்பை தசைக்கட்டிகள். அதன் அளவு, வடிவம், எண்ணிக்கை இவற்றை பொறுத்து குறிகுணங்கள் வேறுபட்டு காணப்படும்.

  இனப்பெருக்க வயதுள்ள பெண்களில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் பேருக்கு இத்தகைய தசைக்கட்டிகள் உண்டாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. என்றாலும், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுழற்சியில் உண்டாகும் மாற்றங்கள் கட்டியின் வளர்ச்சியை பெருக்குகின்றன. மேலும் இவை மாதவிடாய்க்கு முன் அரிதாக தோன்றுவதாகவும், இறுதி மாதவிடாய்க்கு பிறகு தானாகவே சுருங்குவதாகவும் உள்ளது. இந்நோய் நிலைக்கு தற்காலத்தில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை அதிகரித்துவிட்டது

  சித்த மருத்துவமானது இந்நோய்க்கான காரணமாக கருப்பையில் அதிகரித்த கபமும், வாதமும் ஒன்றுகூடி கருப்பையில் கட்டியினை உருவாக்குவதாக கூறுகின்றது. வாதம் எனப்படும் வாயுவானது நம் உடலில் பல்வேறு இயக்கங்களை மேற்கொள்கிறது. மலக்குடல்,சிறுநீர்ப்பை,கருப்பை இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் அபானன் எனும் வாயுவினை சார்ந்ததே. அபானன் எனப்படும் கீழ்நோக்கி செயல்படும் வாயுவின் பாதிப்பால், வாதமானது கபத்துடன் கூடி இத்தகைய கட்டிகள் வளர்ந்து நோய்க்குறிகளை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.

  பெரும்பாலான கருப்பை தசைக்கட்டிகள் சாதாரணமான கட்டிகள் தான். அதனால் ஏற்படும் குறிகுணங்களுக்கான சிகிச்சையை முறையாக மேற்கொண்டு நிர்வகித்தல் என்பது கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை தடுக்கும் வழிமுறை. மருத்துவத்திற்கு அடங்காத குறிகுணங்கள் உள்ளபோது மட்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

  குழந்தைப் பேற்றுக்கு பின்னர் நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு கருப்பை எனும் உறுப்பு, நவீன வாழ்வியலில் தேவையில்லாத உறுப்பாக கருதப்படுவதும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை முறைக்கு காரணம். அமெரிக்கா போன்ற நாடுகளில் தசைக்கட்டிகளால் அதிகரித்து காணும் கருப்பை நீக்க முறை இன்று நம் நாட்டிலும் அதிகரித்துள்ளது வருத்தமளிக்கும் நிகழ்வு தான். நவீன வாழ்வியல் முறை நம் நாட்டிலும் புகுந்து விட்டது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமே.

  இவை ஒருபுறமிருக்க, சினைப்பை சார்ந்த கட்டிகளும் அதிகமான பெண்களுக்கு ஏற்படுகின்றது. சினைப்பை கட்டிகளில் இயல்பாக உண்டாகும் உடல் செயலியல் கட்டிக்கு மருத்துவ சிகிச்சை தேவை இல்லை. ஆனால் மற்ற சினைப்பை சார்ந்த கட்டிகளை சாதாரண கட்டியா? அல்லது புற்றுக்கட்டியா? என்று வேறுபடுத்தி அறியவேண்டியது அவசியம். சிஏ-125, சி.இ.ஏ ஆகிய எளிய ரத்தப்பரிசோதனை மூலம் இவற்றை வேறுபடுத்திக் கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

  சித்த மருத்துவ தத்துவப்படி அபானனை குறைத்து, கருப்பையில் அதிகரித்த கபவாதத்தை தணிக்கும்படியான மருந்துகள் கருப்பை கட்டிகளின் அளவைக் குறைத்து நோய்நிலையைக் குறைக்க உதவுவதாக உள்ளன.

  கபவாதத்தைக் குறைத்து கருப்பைக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடைய மூலிகைகள் பலவற்றை சித்த மருத்துவம் எடுத்துரைக்கின்றது. அமுக்கரா, கழற்சிக்காய், மஞ்சள், விழுதி, மந்தாரைப்பட்டை, சோற்றுக்கற்றாழை, சேராங்கொட்டை, கொடிவேலி போன்றவை அவற்றில் சில. இவற்றை முறையாக எடுத்துக்கொள்வதன் மூலம் கருப்பை சார்ந்த கட்டிக்கு தீர்வு காண முடியும்.

  அமுக்கரா கிழங்கு எனும் மூலிகை பெண்களின் அனைத்து நோய்நிலைகளிலும் நற்பலன் தரக்கூடியது. கருப்பை சார்ந்த கட்டிகளை மட்டுமல்லாது உடலில் உள்ள பல்வேறு கட்டிகளையும் கரைக்கும் தன்மை இதற்குண்டு. மந்தாரை மரத்தின் பட்டையும் அதிகரித்த கபவாதத்தை குறைத்து கட்டியை கரைக்கும். 'மார்க்கிங் நட்' என்று பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்ட சேராங்கொட்டை எனும் மூலிகையை சுத்தி செய்து மருந்தாக பயன்படுத்தும் தனிச்சிறப்பு சித்த மருத்துவத்திற்கே உண்டு. இவை சேர்ந்த மருந்துகளும் கட்டிகளை கரைக்க கூடியதாக உள்ளது.

  அதே போலத் தான் கொடிவேலி எனும் மிகுந்த வெப்பத்தை தரும் மூலிகை. அதனையும் சுத்தி செய்து, சித்த மருத்துவத்தில் கட்டிகளை கரைக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கழற்சிக்காய் எனும் மூலிகையானது பெண்களின் சினைப்பை மற்றும் கருப்பை சார்ந்த பல்வேறு கட்டிகளின் அளவைக் குறைக்கும் சிறந்த மருத்துவ குணமுடையது. பெண்கள் ஆலோசனைப்படி கழற்சிக்காய் சூரணத்தை எடுத்துக்கொண்டால் நல்ல குணம் தரும்.

  கருப்பை தசைக்கட்டியில் சோற்றுக்கற்றாழை சேர்ந்த மருந்துகள் நற்பலனை தருவதாக உள்ளன. எலிகளில் நடத்திய சோதனை முடிவுகளும் இதனை உறுதி செய்கின்றன. ஆகவே கருப்பை சார்ந்த கட்டிகளை குறைக்க பெண்கள் சித்த மருத்துவத்தை நாடுவது என்பது இயற்கையான தீர்வு முறைக்கு வழிவகை செய்யும்.

  நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் மஞ்சள் எனும் மகத்தான சித்த மருத்துவ மூலிகையின் பயன் அளப்பரியது. சாதாரண கட்டிகள் முதல் புற்றுக்கட்டிகள் வரை மஞ்சள் மருத்துவ குணம் உடையது. இதில் உள்ள முக்கிய பாலிபீனோல் வகையான குர்குமின் எனும் வேதிப்பொருள் கட்டிகளை கரைக்கும் மருத்துவ குணத்திற்கு மட்டுமல்லாது, பல்வேறு மருத்துவ தன்மைக்கும் காரணமாகிறது. தினசரி 1.2 கிராம் வரை குர்குமின் ஆறு மாதகாலம் வரை எடுத்துக்கொண்டால் தசைக்கட்டிகள் கரைவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இதில் உள்ள குர்குமின் மூலக்கூறு கருப்பைக் கட்டிகளுக்கு காரணமாகும் பைப்ரோநெக்ட்டின் எனும் புரதக்கூற்றின் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

  அன்றாடம் கிரீன் டீ எடுத்துக்கொள்வதும் கூட கருப்பை தசைக்கட்டிகள் வளர்ச்சியை தடுப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன. அதில் உள்ள இ.ஜி.சி.ஜி எனும் மகத்தான மருத்துவ குணமுள்ள வேதிப்பொருள் கட்டிகளை கரைக்க கூடியதாக உள்ளது. 'மருந்துகளின் அரசன்' என்று கருதப்படும் கபத்தை நீக்கும், சித்த மருத்துவ மூலிகையான கடுக்காயில் கூட இத்தகைய வேதிப்பொருள்கள் உள்ளது. ஆகவே கருப்பை தசைக்கட்டிகள் உருவாவதை தடுக்க பெண்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆகவே பெண்கள் டீ,காபிக்கு அடிமையாவதை விடுத்து கிரீன் டீ எடுத்துக்கொள்வது, உடலின் ஆரோக்கியத்துக்கு அடித்தளமிடும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் உள்ள பெண்களுக்கு இத்தகைய கட்டிகள் வரும் வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வு முடிவுகள் கூறுவதால் பெண்கள் அதற்கு மாற்றாக பாரம்பரிய பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.

  சித்த மருத்துவம் கூறும் மூலிகை மருந்துகளை தவிர்த்து, இன்னும் பல மெழுகு மருந்துகள், செந்தூர மருந்துகள் கட்டிகளை கரைத்து நல்வாழ்க்கைக்கு வழிவகுக்க கூடியதாக உள்ளன. மாதவிடாய் கால பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதும் இது போன்ற தசைக்கட்டிகள் வரவிடாமல் தடுக்கும். கருப்பு உளுந்து பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் மகத்தான உணவு. அதனை அடிக்கடி உணவில் பெண்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாமிச உணவுகள் கருப்பை கட்டிகளை உண்டாக்கும் தன்மையுடையதாக சமீபத்திய ஆய்வுத்தகவல்கள் கூறுவதால் அதனை அளவோடு பாரம்பரிய உணவு பக்குவத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.

  இரவில் விரைவில் உறக்கத்திற்கு செல்வது, அதிகாலை சூரிய வணக்கம் என்பது ஹார்மோன் மாற்றம் உண்டாகாமல் தடுக்கும் எளிய பாரம்பரிய வாழ்வியல் முறை. மேலும் வாரம் இருமுறை எண்ணெய்க்குளியல், கபவாதம் தணிக்கும் உணவு முறைகள், பாரம்பரிய உணவுவகைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது, சரியான உடல்பயிற்சி, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாதம் தணிக்கும் பேதி மருந்து எடுத்துக்கொள்ளுதல் போன்ற சித்த மருத்துவம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகளை பின்பற்றி வாழ்வது இத்தகைய நோய்நிலைகளை தடுக்க கூடியதாக உள்ளது.

  முக்கியமாக பெண்குழந்தைகளுக்கு அதிகம் பயன்படுத்தும் பால் பாட்டில்களில் உள்ள பிஸ்பீனால் வகை வேதிப்பொருட்கள் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் செய்கையை உடையதாகவும், இன்னும் எத்தனையோ உணவிலும் அவை பயன்படுத்தும் பொருளிலும், உள்ள வேதிப்பொருட்கள் ஈஸ்ட்ரோஜென் செய்கை உடையதாக நவீன ஆய்வுகள் கூறுவது, இது போன்ற நோய் நிலைகள் அதிகம் உண்டாக காரணமாக உள்ளது. இவற்றைத் தவிர்த்து பாரம்பரிய உணவும்,மருந்தும், வாழ்வியல் முறையும் மீண்டும் பின்பற்றத் துவங்கினால் பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களைத் தடுத்து நலமான வாழ்விற்கு வழிவகுக்க முடியும்.

  தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

  Next Story
  ×