search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பணி நிமித்தம் பயணிக்கும் பெண்களுக்கான டிப்ஸ்...!
    X

    பணி நிமித்தம் பயணிக்கும் பெண்களுக்கான டிப்ஸ்...!

    • உலகம் முழுவதும் பெண் தொழில்முனைவோர் அதிகரித்து வருகிறார்கள்.
    • உங்களைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிர்ந்து கொள்வதை தவிருங்கள்.

    சமீபகாலமாக உலகம் முழுவதும் பெண் தொழில்முனைவோர் அதிகரித்து வருகிறார்கள். இவர்கள் பணி நிமித்தமாகவும், தொழில்ரீதியாகவும் பயணம் செய்வது தவிர்க்கமுடியாதது. இவ்வாறு பயணிக்கும் போது தமக்கும், தம்முடைய உடமைகளுக்கும் தேவையான பாதுகாப்பை கருத்தில் கொள்வது அவசியமாகும். அதுகுறித்த சில ஆலோசனைகளை இங்கே பார்ப்போம்...

    பயணத்தின்போது நீங்கள் அணியும் ஆடை, அணிகலன்கள் எளிமையாகவும், வசதியாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பளபளப்பான ஆடைகள், விலை உயர்ந்த நகைகள், பைகள் மற்றும் காலணிகள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

    சர்வதேச அளவில் பயணம் செய்யும்போது நீங்கள் செல்லப்போகும் இடத்தில் உள்ள பெண் தொழில்முனைவோர் ஆடை அணியும் விதத்தையும், அதுகுறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் பாதுகாப்புக்கும், தொழில்முறையிலான நல்லுறவு மேம்படுவதற்கும் உதவும்.

    தனியாக விமானப் பயணம் மேற்கொள்ளும்போது நீங்கள் செல்லப்போகும் இடத்துக்கு நேரடி விமானங்கள் இருக்கிறதா, அங்கு பகல் வேளையில் செல்ல முடியுமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விமானப் பயணத்துக்கான தொகை சற்று அதிகமாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி நேரடி விமானம் மற்றும் பகல்நேர பயணத்தை கருத்தில் கொள்வது நல்லது.

    விமானப்பயணத்தில் முடிந்தவரை உங்கள் உடமைகளை உங்களுடனேயே வைத்திருக்கும் வசதியை தேர்ந்தெடுங்கள். விமானத்தில் பயணிக்கும்போது உங்கள் உடமைகள் அடங்கிய பெட்டியை உங்களுடைய இருக்கைக்கு எதிரே உள்ள அடுக்கில் வைத்திருங்கள். அப்போதுதான் அவை உங்கள் பார்வையிலேயே இருக்கும்.

    பயணத்தின்போது நீங்கள் தங்குவதற்காக தேர்ந்தெடுக்கும் விடுதிகளில் வரவேற்பறையில் முழுநேரமும் பணியாளர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தரைத்தளத்தில் உள்ள அறைகளை தேர்ந்தெடுக்காமல் பிரதான தளத்தில் உள்ள அறைகளை தேர்ந்தெடுங்கள். பயணவிடுதி அறையில் இருக்கும் கதவுக்கு பாதுகாப்பு சங்கிலியைப் பயன்படுத்துங்கள்.

    பயணத்தின்போது வாடகை காரில் பயணிக்க நேர்ந்தால் நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள வாலட் சேவைகளைப் பயன்படுத்துங்கள். நன்றாக வெளிச்சம் உள்ள, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வாகனத்தில் ஏறுங்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நீங்கள் செல்லும் இடத்தை அடைவதற்கு பயணிக்கும் போது அடையாளம் தெரியாத ஓட்டுனர்களை தவிர்ப்பது நல்லது. அங்கீகாரம் பெற்ற தரைவழி போக்குவரத்து சேவையைத் தேர்ந்தெடுத்து உங்கள் பயணத்தை முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்.

    வெளியிடங்களுக்கு தனியாக செல்லாமல் குழுவுடன் செல்ல முயற்சி செய்யுங்கள். நீங்கள் செல்லும் இடத்தை சுற்றிப்பார்க்க பகல்பொழுதை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு நம்பகமான நபர்களுடன் மட்டும் வெளியிடங்களுக்கு செல்லுங்கள். வெளியிடங்களில் சாப்பிடும்போது உங்கள் பணப்பையை சாப்பாட்டு மேசை மீது அல்லது நாற்காலியின் கைப்பிடியில் தொங்கவிடுவதைத் தவிர்க்கவும்.

    அந்நியர்களுடன் உங்களைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிர்ந்து கொள்வதை தவிருங்கள். உங்க கைபேசியின் பேட்டரியில் எப்போதும் சார்ஜ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தரமான பேக்-அப் பேட்டரி ஒன்றை உடன் வைத்துக்கொள்ளுங்கள். கைபேசியை சார்ஜ் செய்வதற்கான உபகரணங்களை மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள்.

    Next Story
    ×