search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில்... சம்பந்தமில்லாத நபருக்கு பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வது?
    X

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில்... சம்பந்தமில்லாத நபருக்கு பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

    • சமீப காலங்களில் யூ.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது குறைந்து வருகிறது.
    • பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன.

    யூ.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாகிவிட்டன. சமீப காலங்களில் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையில் பலவித புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி அதனை இன்னும் மிகவும் எளிமையாக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பண மதிப்பு இழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்றின் விளைவால் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்யப்படுவது பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

    டிஜிட்டல் வாலட்டுகள், நெப்ட்/ ஆர்.டி.ஜி.எஸ் (NEFT/RTGS), யூ.பி.ஐ, பேடிஎம், கூகுள் பே, பிம் ஆப், போன் பே மற்றும் பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன. இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு எளிமையாக மாறினாலும், அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன. முக்கியமாக சமீப காலங்களில் யூ.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது குறைந்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம் இந்த யூ.பி.ஐ. முறையில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனையின்போது நமக்கே தெரியாமல் தவறான யூ.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் அதனை திரும்ப பெறுவது என்பது இயலாத காரியம். எனவே ஒரு வேளை நீங்கள் தவறுதலாக வேறொரு யூ.பி.ஐ. கணக்கிற்கு உங்களது பணத்தை அனுப்பி விட்டால் அதனை எந்த வழிகளில் திரும்ப பெற முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

    யூ.பி.ஐ. செயலியின் உதவிக் குழுவை அழைத்து பிரச்சினையை கூறலாம்:

    நீங்கள் எந்த செயலி மூலம் பணத்தை அனுப்பினீர்களோ அந்த செயலியின் உதவி குழுவை தொடர்பு கொண்டு நடந்த தவறை தெரிவிக்க வேண்டும். அனைத்து செயலிகளும் இது போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்காக தங்களுக்கென தனி வாடிக்கையாளர் சேவை குழுவை நிர்வகித்து வருகின்றன.

    * பிம் (BHIM) உதவி எண்

    இரண்டாவதாக பிம் (BHIM) எனப்படும் பாரத் இன்டர்பேஸ் பார் மணி என்ற செயலியின் இலவச வாடிக்கையாளர் உதவி எண்ணான 18001201740 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கேட்கலாம். இது பிரத்யேகமாக வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு என்று உருவாக்கப்பட்ட எண். அந்த எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    * வங்கி உதவி

    பணம் தவறுதலாக அனுப்பப்பட்டதை உணர்ந்து கொண்ட மறுகணமே, அந்த யூ.பி.ஐ. ஐ.டி. மற்றும் அனுப்பிய பணத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து நீங்கள் எந்த கணக்கில் இருந்து பணத்தை அனுப்பினீர்களோ அந்த வங்கியின் ஈ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக இந்த தகவல்களை அனுப்பி அவர்களிடம் உதவி கேட்கலாம். முடிந்தால் அந்த வங்கியின் மேலாளரை சந்தித்தும் உதவி கேட்கலாம். இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரே இடம் வங்கியாக மட்டுமே இருக்க முடியும். முடிந்த அளவு விரைவாக இதை நீங்கள் செய்ய வேண்டும்.

    இதில் இன்னொரு பிரச்சினையும் ஏற்படுவது உண்டு. சில நேரங்களில் தவறான யூ.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது நீங்கள் தவறாக பதிவிட்ட யூ.பி.ஐ. ஐ.டி. செயல்பாட்டில் இல்லையென்றால், உங்களது பணம் உடனடியாக உங்களது கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். எனவே உங்கள் பணம் உடனடியாக திரும்பவில்லை எனில் நீங்கள் தவறுதலாக பதிவு செய்த யூ.பி.ஐ. கணக்கு வேறு ஒருவருடையது என்பதையும், அந்த பணம் அவர்களுக்கு சென்றுவிட்டது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    Next Story
    ×