search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மாதவிடாய் பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை
    X

    மாதவிடாய் பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை

    • பூப்பு சுழற்சியின் போது ஏற்படும் மாறுதல்களே மாதவிடாய் பிரச்சினை என்று கூறுகிறோம்.
    • இடைப்பூப்பு (மெட்ரோஜியா) என்பது மாதவிடாயானது 15 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது ஆகும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றுபவர் டாக்டர் எஸ்.அனிதா. இவர் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது?, அதற்கான தற்காப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து கூறினார்.

    அவர் கூறியதாவது:-

    'பூப்பு' என்ற வார்த்தை பெண்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. இயல்பாக பூப்பு எய்தும் வயது 13 முதல் 16 வரையும், பூப்பு முடியும் வயது 45 முதல் 50 வரையும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் 8 மற்றும் 9 வயதிலேயே பெண் பிள்ளைகள் பருவம் அடைந்து விடுகின்றனர். பூப்பு எய்திய வயது முதல் பூப்பு முடியும் வயதிற்கு இடையில் தோன்றும் பூப்பு சுழற்சியின் போது ஏற்படும் மாறுதல்களே மாதவிடாய் பிரச்சினை என்று கூறுகிறோம்.

    கோளாறுகளின் வகைகள்

    பூப்புதடை (அமினோரியா) என்பது ஒரு பெண்ணுக்கு 25 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வரும் இயல்பான மாதவிடாய் தடைபடுதல் ஆகும். இயல்பாகவே இது ஒரு பெண் கருத்தரித்துள்ள போதும், பாலூட்டும் காலத்திலும் பூப்புதடை ஏற்படும். பெரும்பாடு (மெனோரோஜியா) என்பது இயல்பாக 4 முதல் 7 நாட்களில் நிற்க வேண்டிய ரத்தப்போக்கு நிற்காமல் தொடர்வதாகும்.

    பூப்புவலி (டிஸ்மெனோரியா) என்பது மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பும், மாதவிடாயின் போதும் ஏற்படும் அதிகப்படியான வலியாகும். இடைப்பூப்பு (மெட்ரோஜியா) என்பது மாதவிடாயானது 15 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது ஆகும். வெள்ளைப்படுதல் (லுகோரியா) என்பது பூப்பு காலத்திற்கு முன்னும், பின்னும், யோனி வழியாக சளிகலந்த நீர் போல் வெளிவரும் இயல்பை விட அதிகரித்த வெள்ளை கசிவாகும்.

    காரணங்கள்

    கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் மற்றும் தசை வளர்ச்சி, பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி, கர்ப்பப்பை சுவர்களின் வீக்கம், ஹார்மோன் பாதிப்பு. கர்ப்பப்பை நார்திசுகட்டிகள், மாறுபட்ட உணவு, உடை என்பன போன்ற வாழ்வியல் மாறுபாடுகள்.

    வேலைப் பளுவால் வரும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், ஆல்கஹால் எடுத்தல். உடற்பயிற்சியின்மை, குழந்தை பேருக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் ஹார்மோன் ஊசிகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துவது, அடிக்கடி உருவாகும் நோய் தொற்றுகள் என்பன போன்றவைகள் ஆகும்.

    நிலையற்ற மனநிலை, சோர்வாக உணர்தல், பதற்றம், தூக்கமின்மை, முதுகுவலி, வாந்தி, குமட்டல், உடல் எடை அதிகரிப்பு. அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மார்பகங்களில் வீக்கம், தேவையற்ற ரோம வளர்ச்சி ஆகியவை மாதவிடாய் கோளாறுகளுக்கான சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.

    கர்ப்பப்பை நலன் காக்கும் சித்த மருத்துவம்

    உளுந்து, வெந்தயம், எள், அசோகு, சதாவேரி, சதகுப்பை, வெள்ளை பூசணிக்காய், கற்றாழை, முருங்கை, பெருஞ்சீரகம், குங்குமப்பூ, பிரண்டை முதலியன கர்ப்பப்பை கோளாறுகளுக்கு சிறந்த மூலிகைகள் ஆகும்.

    உளுந்து களி அல்லது உளுந்தங்கஞ்சி செய்து உண்ண அதில் உள்ள இரும்பு சத்து, போலேட் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் கர்ப்பப்பையை வலுவாக்குகிறது. வெண்பூசணிக்காயை ஜூஸ் அல்லது தயிர் சேர்த்து கறியாக உண்ண அதில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் பூப்பு காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. எள்ளில் உள்ள 'வைட்டமின் -இ' பூப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை ஊற வைத்து உண்ண ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படும் தொந்தரவுகள் குணமாகும். முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து குடிப்பதால் மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கினால் ஏற்படும் ரத்த சோகை நீங்கும். குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்த அதில் உள்ள க்ரோசின், பிக்ரோ க்ரோசின் என்னும் சத்துக்கள் கர்ப்பப்பையை வலுவாக்குவதுடன் மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும் குறைக்கும்.

    தற்காப்பு வழிமுறைகள்

    மாதவிடாய் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு இருந்தே சத்தான உணவுகளான உலர்ந்த அத்தி, பேரிச்சை, திராட்சை, நெல்லி, பாதாம் ஆகியவற்றை உண்ண வேண்டும். மேலும் முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மாதவிடாயின் போது ஏற்படும் வலி, ஒழுங்கற்ற பூப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம். மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான உடல் சூட்டை தணிக்க இளநீர், கற்றாழை சாறு, கரும்பு சாறு அருந்தலாம்.

    பொதுவாக நேரம் தவறாமல் உணவு உண்ணுதல் மற்றும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முட்டை ஆகியவை உண்பதுடன், தேவையான அளவு தண்ணீர் அருந்துதல் வேண்டும்.

    மாதவிடாயின் போது குளிர்ந்த நீரில் குளிப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், மைதா சேர்ந்த உணவுகள் உண்ணுவதையும் தவிர்க்க வேண்டும்.

    நடை பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலமும், சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்வதன் மூலமும், மாதவிடாய் கோளாறுகளில் இருந்து முற்றிலும் குணம் பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×