search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தொழில்துறையில் ஜொலிக்கும் இல்லத்தரசிகள்
    X

    தொழில்துறையில் ஜொலிக்கும் இல்லத்தரசிகள்

    • புகழ்ச்சியை விரும்பும் பெண்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள்.
    • கடுமையான உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி மட்டுமே உண்மையானது.

    பெண்கள் தற்போது இரண்டு விஷயங்களில் வெற்றிவாகை சூட விரும்புகிறார்கள். ஒன்று: திருமணமாகி, பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக திகழ்ந்து அதில் வெற்றிபெறுவது. இரண்டு: இளம் பருவத்தில் தன்னிடம் இருந்த திறமையை திருமணத்திற்கு பிறகு மீண்டும் மெருகேற்றி தொழில் துறையில் இறங்கி சாதிப்பது.

    "முந்தைய பெண்கள் குடும்ப வாழ்க்கை வெற்றி மட்டுமே போதும் என்று நினைத்து அதிலே திருப்திபட்டுக்கொண்டார்கள். இன்றைய பெண்கள் அது மட்டும் போதாது, வெளிஉலகுக்கு வந்து தங்கள் திறமைக்கு புத்துயிர்கொடுத்து ஏதாவது ஒரு துறையில் ஈடுபட்டு அதிலும் வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்று கருதுகிறார்கள். குடும்ப நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு நல்ல அனுபவமும், பக்குவமும் கிடைப்பதால், அதன் பின்பு அவர்கள் தொழில்துறைகளில் இறங்கி சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகிவிட்டன" என்கிறார், சுமதி ஸ்ரீனிவாஸ். இவர் பெண்களுக்கான தொழில்துறை வழிகாட்டி.

    'மிஸஸ் ஹோம்மேக்கர்' என்ற பிரபலமான டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் பல ஆண்டுகளாக பெண்களின் மத்தியில் செயல்பட்டு, குடும்பத்தலைவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களை தொழில்துறையிலும் ஜொலிக்கவைத்திருக்கும் இவர், 'இந்திய பெண்களின் திறமைகளும், வளர்ச்சியும்' என்ற தலைப்பில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், சிறப்பு அழைப்பாளராக உரையாற்றியவர். அமெரிக்காவில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். சிறந்த பெண்மணிக்கான விருதை சிங்கப்பூரில் பெற்றவர்.

    குடும்பத்தலைவிகளின் ஆளுமைத்திறன் மற்றும் தொழில் திறன் வளர்ப்பு ஆலோசகராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் சுமதி ஸ்ரீனிவாசுடன் நமது சந்திப்பு:

    உங்கள் குடும்பம் மற்றும் கல்வி பின்னணி பற்றி கூறுங்கள்?

    நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். எனது பெற்றோர் குணசேகர்- சுகுணாவதி. சர்ச் பார்க் கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்சி. படித்தேன். பின்பு எம்.ஏ. சமூகவியல் கல்வியும் கற்றேன். பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். அதன் மூலம் வெற்றித் தோல்விகளை சமமாக பாவிக்கும் பண்பு வளர்ந்தது. பள்ளி நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் அப்போதே என்னிடம் உருவாகிவிட்டது. பள்ளி, கல்லூரி இரண்டிலும் பெண்களுடனே படித்ததால், பெண்களின் மன இயல்புகள், புரிதல்கள், விருப்பங்கள் பற்றி இளம் வயதிலே நன்றாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

    குடும்பத் தலைவியான பின்பு உங்கள் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது?

    கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் நடந்தது. என் கணவர் ஸ்ரீனிவாஸ். எங்களுக்கு இரண்டு மகன்கள். நான் பள்ளியில் படிக்கும்போதே தையல் மற்றும் சமையல் கலை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஐஸ்கிரீம், கேக் தயாரிப்பதெல்லாம் எனக்கு அத்துப்படியான விஷயம். எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் சமையல் தெரிந்திருக்கவேண்டும் என்பது என் கருத்து. குடும்பத்தை நிர்வகிப்பதற்கு தேவையான விஷயங்களையும் என் தாயார் எனக்கு கற்றுத்தந்திருந்தார். கணவர் மூலமும் எனக்கு சிறந்த அனுபவங்கள் நிறைய கிடைத்தன.

    குடும்பத்தலைவியான நீங்கள், பெண்கள் நலன் சார்ந்து செயல்பட எப்படி தயாரானீர்கள்? அதற்கான காரணம் என்ன?

    நான் ஏராளமான கலைப் பயிற்சிகளை பெற்றிருந்தாலும், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த கல்விகளை கற்றிருந்தாலும் குடும்பத்தை மட்டுமே கவனித்துக்கொள்ளும் பொறுப்பே போதும் என்று நினைத் திருந்தேன். ஆனால் திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, நான் வெளிஉலகத்தை நோக்கி காலடி எடுத்துவைக்கும் சூழ் நிலையை உருவாக்கியது. பணத்தேவைக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என்னிடம் இருந்த திறமையை பயன்படுத்தி, நெருக்கமானவர்களுக்கு முதலில் 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுத்தேன். அதில் அதிக வரவேற்பு கிடைத்ததால் அதையே தொழிலாக்கினேன். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகள் நடத்துகிறேன். கடமை உணர்வோடு அதை புதுமையான முறைகளில் செய்துகொண்டிருக்கிறேன்.

    எனக்கு ஆயிரக்கணக்கான பெண்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் திறமையுள்ள குடும்பத்தலைவிகளில் பலர் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பதையும், அவர்கள் வெளி உலகிற்கு வந்து சாதிக்க விரும்புவதையும் அறிந்தேன். அவர் களுக்கு வழிகாட்டுவதற்காக 'மிஸஸ் ஹோம் மேக்கர்' என்ற திறமை அறியும் தொடரை பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரபலமான டி.வி.களில் நடத்தி ஏராளமான பெண்களுக்கு வழிகாட்டினேன். அவர்கள் எனது பயிற்சியாலும், தங்கள் முயற்சியாலும் சிறந்த தொழிலதிபர்களானார்கள். இப்போதும் சோல்மேட் பவுண்ட் டேஷன் என்ற அமைப்பு மூலம் குடும்பத்தலைவி களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறேன்.

    நீங்கள் தொழில்துறைக்கு அறிமுகமான காலகட்டத்தில், உங்கள் திறமையை நிரூபிக்க எந்த மாதிரியான சவால்களை எல்லாம் எதிர்கொண்டீர்கள்?

    அது ஒரு கடுமையான காலகட்டம். எனக்கு ஏற்பட்டது போன்ற நெருக்கடியை தொழில்துறைக்கு வர விரும்பும் பெரும்பாலான பெண்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். நான் வெளிஉலகத்தில் காலடி எடுத்துவைத்தபோது, சாதிப்பேனா- சறுக்கிவிழுந்துவிடுவேனா என்ற பயம் என் குடும்பத்தினருக்கு இருந்தது. என் உழைப்பு மூலம் அந்த பயத்தை போக்க வேண்டியதிருந்தது. அடுத்து அவர்களுக்கு எனது திறமையை நிரூபித்துக்காட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காக புதுமையாக சிந்தித்து, கடுமையாக உழைத்தேன். யாரையும் எதிர்பார்க்காமல் என் வேலையை செய்தேன். என்னால் முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் என்னாலும் முடியும் என்ற தெளிவை உருவாக்கினேன்.

    நான் தொடக்க காலத்தில் கடைப்பிடித்த முக்கியமான நடைமுறை ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நான் அப்போது நிகழ்ச்சிகளுக்காக தினமும் ஐந்து பேரை சந்திக்கிறேன் என்றால், அவர்கள் ஒவ்வொருவர் செயல்பாடுகளையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, அவர்கள் அணுகுமுறை, குணாதிசயங்கள் பற்றி அன்றன்று டைரியில் எழுதிவிடுவேன். அது, அவர்களை அடுத்தடுத்து நான் சந்தித்து சிறப்பாக செயல்பட கைகொடுத்தது. அப்படி நான் எடுத்துள்ள குறிப்புகள் மூலம் மனித உணர்வுகளை நன்றாக கற்றுக்கொள்ள முடிந்தது. அப்படி நான் பாடம் போல் கற்றுக்கொண்ட விஷயங்களை எல்லா பெண்களுக்கும் இப்போது கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

    குடும்பத்தலைவிகளை தொழிலதிபர்களாக்குவது எளிதான காரியமா? அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன?

    குடும்பத்தை நன்றாக நிர்வகிக்கத் தெரிந்த ஒவ்வொரு பெண்ணாலும் சிறந்த தொழிலதிபராக முடியும். ஏன்என்றால் ஒரு தொழிலதிபருக்கான அடிப்படை தகுதி அவளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதிலே கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களது திறமையை அவர்களே உணராமல் இருப்பதும், வெளி உலகத்தை அணுக அவர்கள் தயங்குவதும்தான் அவர்களிடம் இருக்கும் குறை. சில குடும்பங்களில் பெண்களை மட்டம்தட்டியே வைத்திருப்பார்கள். அதனால் அவர் களுக்கு சிந்திக்கும் ஆற்றலும் குறைந்திருக்கும்.

    அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவேண்டும். இருக்கிற திறமையை மேம்படுத்துவது, வீட்டில் உள்ளவர்கள் குறைசொன்னாலும் மனதொடிந்து போகாமல் இருப்பது, ஒருபோதும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தை கையாளுவது, அவமானம் ஏற்பட்டாலும் துவண்டுபோகாமல் நிமிர்ந்து நிற்பது, வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி வேறு- வெளியே செயல்படும் பெண் வேறு என்று பகுத்து உணர்வது, யாரையும் காயப்படுத்தாமல் விஷயத்தை புரியவைப்பது, ஈகோ இல்லாமல் நடந்துகொள்வது போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்து வழிகாட்டவேண்டும்.

    35 முதல் 45 வயது வரையிலான பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்களிடம் தொழில் ஆர்வம் மிகுந்திருக்கிறதா?

    இந்த வயது பெண்களிடம் உடல் பலத்தோடு மனபலமும் அதிகமாக இருக்கிறது. நாம் ஒரு நல்ல அம்மா மட்டுமல்ல அதற்கு மேலும் நமது திறமையை வெளிப் படுத்த வேண்டும் என்ற உத்வேகம் வருகிறது. 35 முதல் 45 வயதுதான் பெண்களின் வாழ்க்கையில் சிறந்த வயது. இந்த பருவத்தில் தோற்றம், சிந்தனை, செயல் அனைத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இது அவர்கள் வெளிஉலக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும், தொழில் தொடங்கவும், கடுமையாக உழைக்கவும் ஏற்ற பருவம்.

    தொழில்துறைக்கு வர விரும்பும் பெண்கள் தவறான வழிகாட்டிகளால் பாதிக்கப்படவும் செய்வார்கள் அல்லவா?

    சரியாக வழிகாட்டுகிறவர்களும், வீழ்ச்சியிலும் உடன் இருந்து நம்பிக்கையூட்டுகிறவர்களும் இப்போது குறைந்துவிட்டார்கள். தயக்கங்களோடு தொழில்துறைக்கு வரும் பெண்களை தடுமாறச்செய்கிறவர்களும் இருக்கிறார்கள். அதிகமாக பாராட்டுகிறவர்களை பெண்கள் முழுமையாக நம்பிவிடக்கூடாது. ஆனால் உண்மையான விமர்சனங்களுக்கு செவிசாய்க்கவேண்டும். பெண்கள் யாரை நம்பியும் தங்கள் குடும்ப விஷயங்களை கூறக்கூடாது. அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.

    இப்போதும் பெண்கள் புகழ்ச்சிக்கு அடிமையாகிவிடுகிறார்களா? பெண்கள் முன்னேறும்போது மிகவும் கவனிக்கத்தகுந்த விஷயங்கள் என்னென்ன?

    புகழ்ச்சியை விரும்பும் பெண்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள். பெண்களை பாராட்டுவதற்காகவே பிறவி எடுத்திருப்பதுபோல் ஒருசிலர் நடந்துகொள்வார்கள். அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். புகழ்ச்சியை எல்லா பெண்களும் ரசிப்பார்கள். ரசிப்பதோடு நிறுத்திவிட்டு, புன்னகையோடு அந்த இடத்தில் இருந்து அகன்றுவிடவேண்டும். கடுமையான உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி மட்டுமே உண்மையானது.

    பெண்கள் தொழில்துறையில் இறங்கட்டும்! சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழட்டும்!

    சுமதி ஸ்ரீனிவாஸ்

    Next Story
    ×