search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    நன்றாக சாப்பிடுங்கள்...! நல்லதையே சாப்பிடுங்கள்...!
    X

    நன்றாக சாப்பிடுங்கள்...! நல்லதையே சாப்பிடுங்கள்...!

    • பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான்.
    • நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம்.

    ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால், ஆரோக்கிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதுவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்

    `பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான். சுலபமாகவே குறைத்து விடலாம். கார்போஹைட்ரேட் எனப்படும் சாதத்தை குறைத்துக்கொண்டு, நார்ச்சத்து, புரதம் அதிகமாக இருக்கும் காய்கறி, பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். உணவுகளுடன், கேரட், வெள்ளரி சாலட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    சிறுதானியங்களையும், பயிர் வகைகளையும் உணவோடு சேர்த்துக்கொண்டால், 3 மாதங்களிலேயே 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துவிடலாம். இதுவே ஆரோக்கியமான உணவு முறை. இதுவே பல இளம் தாய்மார்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் வழிகாட்டி.

    சோறு குறைவாகவும், காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பயிர் வகைகள் அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில், உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.

    உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல தூக்கமும், உடற்பயிற்சியும் அவசியம். இது பெண்களுக்கு மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க ஆசைப்படும் எல்லோருக்குமே பொருந்தும். சமச்சீரான உணவு முறையில் உடல் எடையை குறைப்பதுதான், ஆரோக்கியமானது.

    சப்ளிமெண்ட் பவுடரை கலந்து குடித்தால் உடல் எடை குறையும், குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும், பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையும்... என்பது போன்ற தகவல்களில் உண்மையும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை. ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டால், ஆரோக்கிய உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதுவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

    வீட்டில் சமைக்கப்படாமல் கடைகளில் வாங்கி சுவைக்கப்படும் பாக்கெட் மற்றும் பாட்டில் உணவு பொருட்களைதான் ஜங்க் புட் என்கிறோம். ஏன்..! சாக்லெட்டும் ஜங்க் உணவுதான். இதில் கெட்ட கொழுப்பு, அளவிற்கு அதிகமான சர்க்கரை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாமோலின் ஆயில் நிறைந்திருக்கிறது.

    இவை வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிக் சிண்ட்ரம்), அதிக உடல் பருமன் (ஒபேசிட்டி) மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. முடிந்தவரை பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, ராகி பிஸ்கட், வேர்க்கடலை உருண்டை, சோளம், பாப்கார்ன், ராகி அரிசி புட்டு போன்றவற்றை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

    குழந்தைகள் பழம், காய்கறிகளை உண்ண மறுத்தால், அதை வேறுவிதமாக சமைத்து கொடுக்கலாம். பழங்களை சாப்பிடாத குழந்தைக்கு புரூட் சாலட் கொடுக்கலாம். காய்கறிகளை சூப் ஆக சமைத்துக் கொடுக்கலாம். இல்லை என்றால், ஜூஸ் ஆக மாற்றி பருக கொடுக்கலாம். இப்போது காய்கறிகளை கொண்டு சட்னி வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு வண்ணமயமான உணவு பிடிக்கும் என்பதால், பலதரப்பட்ட வண்ணங்களில் உணவு சமைக்கலாம்.

    எல்லா வயது பெண்களும் தங்கள் உணவோடு, நிச்சயம் கால்சியம் (பால், தயிர், மோர்), புரோட்டீன் (முட்டை, சிக்கன், சீஸ், மீன், உடைந்த கடலை, பீன்ஸ், பருப்பு வகைகள்) சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை தாண்டிய பெண்கள், தினமும் 2 பேரீச்சை பழங்களை சாப்பிட வேண்டும்.

    முடிந்தவரை, ஆரோக்கியமானதை சாப்பிட வேண்டும். தங்களுக்கு என நேரம் ஒதுக்கி, தங்களை உடல் அளவிலும் மனதளவிலும் பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம். கட்டாயம், ஏதாவது ஒரு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மனிதனின் வாழ்க்கை காலம், 100 வயதில் இருந்து 80 வயதாக குறைந்தது. பின்பு, 60 வயதாக சுருங்கியது. இப்போது 40 வயதிலேயே, மாரடைப்பு போன்ற பிரச்சினைகளால் வாழ்நாள் குறைந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்திற்கு, உணவுகள்தான் முக்கிய காரணம்.

    நாம் உண்ணும் உணவுகளும், நம்முடைய உணவு பழக்கவழக்கமும் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதால், உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    முடிந்தவரை, நன்றாக சாப்பிடுங்கள். நல்லதையே சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகளை தவிர்த்து சமச்சீரான உணவு பழக்கத்திற்கு மாறுங்கள்.

    Next Story
    ×