என் மலர்
பெண்கள் உலகம்

வித்தியாசமான காதலர் தின கொண்டாட்டங்கள்
- பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
- சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனினும் உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டம் மாறுபடுகிறது. சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு தேதியில் கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள். காதலர் தின பரிசு பொருட்களும் வித்தியாசப்படுகிறது. அத்தகைய காதலர் தின கொண்டாட்டம் பற்றி பார்ப்போம்.
சீனா
சீனாவில் கொண்டாடப்படும் `கியூஸி' திருவிழா காதலர் தினத்திற்கு இணையாக கருதப்படுகிறது. அதனையே அந்நாட்டு மக்கள் காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். இது அந்நாட்டு காலண்டரில் சந்திர மாதத்தின் ஏழாவது நாளில் வருகிறது. அதாவது ஆகஸ்டு மாதம் சீனாவின் காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் இளம் பெண்கள் ஜினு என்னும் தெய்வத்திற்கு பழங்களை பிரசாதமாக படைத்து, தனக்கு நல்ல துணைவனை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகிறார்கள். திருமணமான தம்பதியர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள்.
இங்கிலாந்து
பிப்ரவரி 13-ந் தேதி இரவு இளம் பெண்கள் தலையணையின் நான்கு மூலைகள் மற்றும் மத்திய பகுதி என ஐந்து பிரியாணி இலைகளை வைத்தபடி தூங்குவார்கள். தங்கள் வருங்கால கணவனைப் பற்றிய கனவுகள் வருவதற்காக இந்த முறையை பின்பற்றுகிறார்கள். திருமணமான தம்பதியர் பிப்ரவரி 14-ந் தேதி ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறி காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள். இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டபடி தங்கள் காதல் உணர்வுகளை பரிமாறிக்கொள்வார்கள்.
பிரேசில்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாரம்பரிய திருவிழா நடத்தப்படுவதால் அங்கு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை. அதற்கு மாற்றாக ஜூன் 12-ந் தேதி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அப்போது சாக்லெட்டுகள், வாழ்த்து அட்டைகள், பூக்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்கிறார்கள்.
கானா
கோகோ ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதால் காதலர் தினத்தை சாக்லெட்டுடன் தொடர்புபடுத்திவிட்டார்கள். 2005-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14-ந் தேதி அங்கு சாக்லெட் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு சாக்லெட் மற்றும் கோகோ பொருட்களை பரிமாறி மகிழ்கிறார்கள்.
இத்தாலி
இத்தாலியர்கள் காதலர் தினத்தை பரிசு பரிமாற்றங்களுடன் கொண்டாடுகிறார்கள். அங்கு பிரபலமான காதலர் தின பரிசுகளில் ஒன்று பாசி பெருகினா. இதுவும் ஒருவகை சாக்லெட்தான். அதில் சில நட்ஸ் வகைகள், பால் பொருட்கள் கலந்திருக்கும். அதனுடன் காதல் வாசகங்கள் அச்சிட்டப்பட்ட வாழ்த்து அட்டையை பரிசாக வழங்குகிறார்கள்.
அர்ஜெண்டினா
இங்கு வசிப்பவர்கள் பிப்ரவரியில் காதலர் தினத்தை பாரம்பரியமாக கொண்டாடு வதில்லை. அதற்கு பதிலாக, ஜூலை மாதம் கடைப்பிடிக்கப்படும் `சுவீட் வீக்' எனப்படும் இனிப்பு வாரத்தில் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பரிசுப் பொருட்கள் மற்றும் சாக்லேட்டுகளை காதலர்கள் பரிமாறிக்கொள்கிறார்கள்.
தைவான்
தைவானில், பிப்ரவரி 14-ந் தேதி மட்டுமின்றி ஜூலை 7-ந் தேதியும் ஆண்கள் பெரிய பூங்கொத்துகளை காதல் பரிசாக வழங்குவார்கள். இளம் பெண் ஒருவர் 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை பரிசாக பெற்றால் அந்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் என்று அர்த்தம்.
பின்லாந்து
பின்லாந்தின் காதலர் தினம் ஆண்-பெண் இருபாலருக்கானது அல்ல. தங்கள் நண்பர்களுடன்தான் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாட்டு மொழியில் இந்த நாள் நண்பர்களின் தினம் என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பான்
ஜப்பானிய இளம் பெண்கள் பிப்ரவரி 14 அன்று தங்களுக்கு பிடித்தமான ஆண் தோழர்களுக்கு பரிசுகள் மற்றும் சாக்லெட்டுகளை வழங்குகிறார்கள். அதன் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தோழமையுடன் பழகும் ஆண் நண்பர்களிடத்தில் தங்களுக்கு காதல் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலான சாக்லெட்டுகளும் பரிமாறப்படுகின்றன. அன்றைய தினம் ஆண்கள் பரிசு பொருட்கள் எதுவும் வழங்குவதில்லை. ஒரு மாதம் கழித்து மார்ச் 14-ந் தேதியை ஜப்பானிய ஆண்கள் காதலர் தினமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்கா
உலகின் பல பகுதிகளைப் போலவே, தென் ஆப்பிரிக்காவில் அன்பின் அடையாளமாக மலர்களை பரிசளித்து காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பெண்கள் தங்கள் காதலர்களின் பெயர்களை தாங்கள் அணியும் ஆடையில் பதிக்கும் வழக்கமும் இருக்கிறது.
பிலிப்பைன்ஸ்
இங்கு பிப்ரவரி 14-ந்தேதி காதலர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாளாக அமைந்துவிடுகிறது. காதலர் கள் அனைவரும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒன்றாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
அமெரிக்கா காதலர்கள், திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு பரிசுகள் வழங்கி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், சாக்லெட்டுகள், மலர்கள் என இவர்களின் காதல் கொண்டாட்டம் முடிந்துவிடுவதில்லை. நகைகளை பரிசளிக்கும் வழக்கமும் இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் காதலர் தினத்தன்று சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அங்கு பணம் புழங்குகிறது.
ஜெர்மனி
ஜெர்மனியில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றன. எனவே காதலர் தினத்தில் பன்றி சிலைகளை பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு பன்றி உருவம் பொறித்த பொம்மைகள், சிற்பங்களை வழங்குவதுடன் சாக்லெட்டுகள் மற்றும் மலர்களையும் பரிமாறுகிறார்கள்.






