search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்களின் கைப்பகுதிக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் ஸ்லீவ் வகைகள்
    X

    பெண்களின் கைப்பகுதிக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் 'ஸ்லீவ்' வகைகள்

    • பெண்கள் உடுத்தும் ஆடைகளின் கைப்பகுதிகள், அவர்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும்
    • அழகுக்கு அழகு சேர்க்கும் சில 'ஸ்லீவ்' வகைகளை இங்கே காணலாம்:

    பெண்கள் உடுத்தும் ஆடைகளின் கைப்பகுதிகள், அவர்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும் தன்மை கொண்டவை. 'ஸ்லீவ்' என்று அழைக்கப்படும் கைப்பகுதியை, அணிபவர்களின் உருவத்திற்கு ஏற்றவாறு பலவிதமாக மாற்றி அமைக்கலாம். ஆடைகளில் கைப்பகுதியின் நிறம், அமைப்பு, வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, பருமனான உடல்வாகு கொண்டவர்களையும் பிட்டாக காட்ட முடியும். அவ்வாறு அழகுக்கு அழகு சேர்க்கும் சில 'ஸ்லீவ்' வகைகளை இங்கே காணலாம்:

    பட்டர்பிளை ஸ்லீவ்: பட்டாம்பூச்சியின் இறகுகள் போல வளைந்து வருவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. தோள்பட்டையில் இருந்து ஆரம்பிக்கும் பட்டர்பிளை ஸ்லீவ் ¾ பகுதி அளவு கொண்டது. இந்த டிசைனை சுடிதார், குர்த்தி, பிளவுஸ் போன்றவற்றில் பொருத்தி அணிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அணியும் உடைகளுக்கு இது சரியான தேர்வாகும்.

    பெல் ஸ்லீவ்: பெல் ஸ்லீவ் டிசைன், தோள்பட்டையில் இருந்து மணிக்கட்டு வரை அகலமாக விரிவடைந்து, கடைசியில் 'பெல்' போன்று அதாவது 'மணி' போன்ற வடிவத்துடன் இருக்கும். இந்த வகையான கைப்பகுதியை, பல அளவுகளிலும், பலவித ஆடைகளுடன் சேர்த்து அணியலாம்.

    கப் ஸ்லீவ்: பார்ப்பதற்கு சட்டையின் கைப்பகுதியை மேலே சுருட்டி விட்டது போல காட்சி தரும், 'கப் ஸ்லீவ்' பல பெண்களின் தேர்வாகும். உடையை உருவாக்கும் பொழுதே இந்த ஸ்லீவை சுருட்டி தைத்து, அதன் மேலே ஒரு பட்டனைப் பொருத்தி விடுவார்கள். நீண்ட டாப்ஸ், க்ராப் டாப்ஸ் மற்றும் பாரம்பரிய குர்திகளில் இது பொருத்தமாக இருக்கும்.

    லாங் ஸ்லீவ்: தோள்பட்டை முதல் மணிக்கட்டு வரை நீண்டு வரும் லாங் ஸ்லீவ், டாப்ஸ், பிளவுஸ் என அனைத்து ஆடைகளுக்கும் ஏற்றது. பல பெண்களின் முதல் தேர்வாக இருக்கும் இதை கருப்பு, வெள்ளை, பச்சை ஆகிய ஒரே நிறங்களாலான ஆடைகளில், வைத்து அணிந்தால் அழகாக இருக்கும்.

    ஓபன் ஸ்லீவ்: கை உள்ள உடை அணிய விரும்பாதவர்களுக்கு ஓபன் ஸ்லீவ் பரிந்துரைக்கப்படுகிறது. இது தோள்பட்டைக்கு அழகான தோற்றம் கொடுக்கும். பலரும் விரும்பி அணியும் 'போட் நெக்' உள்ள ஆடைகளில் இந்த ஸ்லீவ் பொருத்தமாக இருக்கும்.

    ஸ்பிலிட் ஸ்லீவ்: ஸ்பிலிட் ஸ்லீவ் டிசைன், ¾ அளவு ஸ்லீவாகவும், முழு ஸ்லீவாகவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அணிந்து கொள்ளலாம். 'ஸ்பிலிட்' என்றால் 'பிளவு' என்று அர்த்தம். இந்த வகை கைப்பகுதியில் 'பிளவு' போன்ற அமைப்பு இருக்கும். அது முடியும் இடத்தில் துணி அல்லது பட்டன் கொண்டு பொருத்திக்கொள்ளும் அம்சத்துடன் வருகிறது.

    பெட்டல் ஸ்லீவ்: 'பெட்டல்' என்றால் 'பூவின் இதழ்' என்று அர்த்தமாகும். இந்த வகை கைப்பகுதி சிறியதாக இதழ் போன்ற வடிவமைப்புடன் இருக்கும். அதை மேலும் மெருகேற்ற, அதன் பார்டரில் துணியின் நிறத்துக்கு ஏற்றவாறு, உதாரணத்திற்கு மஞ்சள் நிறம் கொண்ட டாப்பிற்கு, கருப்பு நிற பார்டர் வைத்து தைப்பார்கள்.

    Next Story
    ×