search icon
என் மலர்tooltip icon

    வேட்பாளர்கள்

    திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று மனுதாக்கல் செய்தார்.

    திருச்செந்தூர்:

    அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 233 பேர் தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் இன்று மனுதாக்கல் செய்தனர்.

    திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் ச.ம.க. தலைவர் சரத்குமாரும் மனுதாக்கல் செய்தார். முன்னதாக அவர், ச.ம.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருச்செந்தூர் தேரடி திடலில் இருந்து புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, காமராஜர் சாலை வழியாக ஊர்வலமாக வந்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் திருச்செந்தூர் தொகுதி தேர்தல் அலுவலரான உதவி கலெக்டர் தியாகராஜனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது அவருடன் அவரது மனைவி ராதிகா சரத்குமார், ச.ம.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் சுந்தர், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. செயலாளர் வடமலை பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்பு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

    திருச்செந்தூர் தொகுதி முழுவதும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கொண்டேன். அந்த குறைகள் முழுவதும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். திருச்செந்தூர் கோவிலை சுற்றி பூங்கா அமைக்கப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் கோவிலை சுற்றி பூங்கா அமைத்து சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்வேன். மேலும் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி ஆகியவை தரமாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

    திருச்செந்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முனுசாமி பெசன்ட் நகர் பகுதியில் ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
    சென்னை:

    வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி. முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட பெசன்ட்நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். பெசன்ட்நகர் பஸ்நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் வழிபட்டுவிட்டு தனது வாக்கு சேகரிப்பைத் தொடங்கி அவர், அங்கிருந்த கடைக்காரர்களிடமும், குடியிருப்புவாசிகளிடமும் இரட்டை இலை சின்னத்தைக் காட்டி கைகூப்பி வணங்கி வாக்கு கேட்டார்.

    தென்சென்னை அ.தி.மு.க. எம்.பி. ஜெயவர்த்தன், அசோக் எம்.எல்.ஏ, வேளச்சேரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன் மற்றும் அ.தி.மு.க.வினர் சூழ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    கடற்கரையோரம் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தோரைச் சந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்கக் கேட்டனர். ஜெ.ஜெயவர்த்தன் எம்.பி. அங்கிருந்தவர்களிடம் வேட்பாளர் எம்.சி.முனுசாமியை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டார்.
    பெசன்ட்நகர் மீன் கடைப் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது, தங்களுக்கு நல்லமுறையில் மீன்கடைகள் அமைத்துத்தரவும், கழிவுநீர் வெளியேற வசதி செய்துதரவும் கோரிக்கை வைத்தனர்.  அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக எம்.பி. ஜெயவர்த்தன் குறிப்பிட்டார்.

    செருப்பு தைக்கும் தொழிலாளி, ஜூஸ் வியாபாரி, காய்கறி கடைக்காரர், பஸ்நிலையக் கடைக்காரர்களிடம் சென்றும் வேட்பாளர் எம்.சி.முனுசாமி உள்ளிட்டவர்கள் வாக்கு சேகரித்தனர்.

    மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று வடக்கு தொகுதி வேட்பாளர் ராஜன் செல்லப்பா கூறினார்.

    மதுரை:

    மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பா இன்று தொகுதியின் தேர்தல் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பகுதி செயலாளர்கள் ஜெயவேல், அண்ணாநகர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு தலைமை தாங்கி வேட்பாளர் ராஜன் செல்லப்பா ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:–

    மதுரை வடக்கு தொகுதி யின் அ.தி.மு.க. வேட்பாளராக கழக பொதுச்செயலாளர் அம்மா என்னை அறிவித்துள்ளார். இதற்காக என் வாழ்நாள் முழுவதும் நான் அம்மாவுக்காக பணி செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.

    கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 10 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    மதுரை வடக்கு தொகுதியில் அதிக வாக்குகள் வாங்கி நாம் வெற்றிபெற வேண்டும். அதற்காக கட்சியினர் தீவிர களப்பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களையும் வீடு, வீடாக சென்று சந்தித்து அம்மா அரசின் சாதனை களை எடுத்துக்கூற வேண் டும்.

    6–வது முறையாக அம்மாவை முதல்வராக்கிட அயராது உழைத்து அம்மாவுக்கும், கழகத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×