என் மலர்
வழிபாடு

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் மாசிப்பெருந்திருவிழா தொடங்கியது
- இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
- 28-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளை ஊராட்சியில் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலும், வீ.பூசாரிபட்டி அருகில் மந்திரம்காத்த மகாமுனி, பொன்னர் -சங்கர்-தங்காள், மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். வீரப்பூரை தொடர்ந்து தொப்பம்பட்டி ஊராட்சி வீரமலை அடிவாரத்தில் ஒரு பகுதியில் உள்ள அண்ணன்மார் தங்களை மாய்த்துக் கொண்ட படுகளம் கரடு என்ற இடத்தில் உள்ள பிரமாண்ட கோவிலிலும், மருங்காபுரி ஒன்றியம், வளநாட்டில் அண்ணன்மார் கோட்டை கட்டி ஆண்ட கோட்டைக் கோவிலிலும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும்.
சிவராத்திரியையொட்டி கடந்த சனிக்கிழமை இரவு வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்பின்னர் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான மீனா ராமகிருஷ்ணன், தரனீஷ், ஆர்.பொன்னழகேசன், கவுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகளும், நான்கு கரை பட்டையதார்களுமான பெரியபூசாரி செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், சின்னபூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்திய பின் நேற்று காலை வழக்கமான பூஜைகள், சாமி அழைப்பு, சாமியிடம் அனுமதி கோருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் இரவில் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலில் கொடியேற்றிய பின் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அர்ச்சகர் வெங்கடசுப்பையர் குடும்பத்தினரின் முதல் நாள் திருவிழா மண்டகப்படி ரமேஷ் என்ற ரெங்கசாமி அய்யர் தலைமையில் நடைபெற்றது. திருவிழாவின் தொடர்ச்சியாக தினமும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை வேடபரி குதிரைத் தேர், 28-ந் தேதி பெரியகாண்டியம்மன் பெரிய தேரில் பவனி வரும் பெரிய தேரோட்டம் நிகழ்ச்சியும், மார்ச் 1-ந் தேதி மாலை மஞ்சல் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றது.
தொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள படுகளம் கோவிலும் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. வருகிற 26-ந் தேதி இரவு படுகளம் கோவிலில் முக்கிய திருவிழா நடைபெறுகின்றது. படுகளம் கோவில் பம்ரபரை அறங்காவலர்களும், பூசாரிகளுமான முனியப்பன் பூசாரி, ஆ.கருப்பண்ணசாமி பூசாரி, வீரசங்கன் பூசாரி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வளநாடு கோட்டை கோவிலில் சிவராத்திரியை தொடர்ந்து மாசி திருவிழா தொடங்கியது. வளநாட்டில் வருகிற 25-ந் தேதி மாலை முதல் ஞாயிற்றுக் கிழமை காலை வரை முக்கிய திருவிழா நடைபெறுகின்றது. ஞாயிற்றுக்கிழமை காலை கிளி பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வைரவன், தக்கார் மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.






