search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு
    X

    சதசண்டி பெருவேள்வி நடைபெற்ற போது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் வெக்காளி அம்மன்).


    உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

    • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 48 நாட்களாக நடைபெற்று வந்த மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதையொட்டி மண்டலாபிஷேக நிறைவு விழா கடந்த 20-ந்தேதி காலை ஆனைமுகன் வழிபாடு வேள்வியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனிடம் அனுமதி பெறப்பட்டது. இரவு 9 மணிக்கு குடம் வழிபாடு, தேவியர் போற்றி வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 21-ந்தேதி காலையில் முதற்கால சண்டி வேள்வி, மாலையில் 2-ம் காலம், நேற்று முன்தினம் காலையில் 3-ம்கால சண்டி வேள்வி, மாலையில் 4-ம் கால சண்டி வேள்வி நடைபெற்றது.

    மண்டலாபிஷேக நிறைவு நாளான நேற்று காலை 7.30 மணிக்கு 5-ம் கால சண்டி பெருவேள்வி மற்றும் மண்டாலாபிஷேக நிறைவு வழிபாடு, கன்னியர் வழிபாடு, சுமங்கலி வழிபாடு, காளையர் வழிபாடு நடைபெற்றது. பிற்பகல் 11 மணிக்கு சதசண்டி பெருவேள்வி நிறைவு தீப வழிபாட்டை தொடர்ந்து பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் லட்சுமணன், உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×