search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தை அமாவாசை: டெல்டா மாவட்ட காவிரி ஆற்றில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
    X

    தை அமாவாசை: டெல்டா மாவட்ட காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • காவிரி ஆற்றில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.

    மாதந்தோறும் அமாவாசை எனும் புண்ணிய தினம் வரும். மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு ஆண்டில் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று தை அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள், கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதில் தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். முன்னதாக காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

    தை அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் ஐயாறப்பர் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சூலபாணிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சாமி வீதி உலா 4 வீதிகள் வழியாக நடந்தது.

    இதை போல் கும்பகோணம் காவிரி ஆற்றின் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, அரசலாற்றங்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குவிய தொடங்கினர். அங்கு அவர்கள் தங்களது முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர். இதனால் கும்பகோணம் நீர் நிலைகள் முன்பு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. பல தற்காலிக கடைகள் முளைத்தன.

    மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலா கட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்களிடம் தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தை அமாவாசையில் கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து கடலில் புனித நீராடினர். இதைப்போல் வேதாரண்யம் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோவிலின் திருக்குளத்தில் புனித நீராடி கோவிலில் படிக்கட்டில் அமர்ந்து தங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    காலை முதல் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்து வருவதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×