search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தை அமாவாசை: இன்று நெல்லையில் 64 தீர்த்த கட்டங்களில் பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு

    • பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை அமாவாசை நாட்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.

    இந்த நாளில் புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள்ளும், தண்ணீரும் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்த்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசி நமக்கு கிடைக்கும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதீகம்.

    அதன்படி இன்று தை அமாவாசையையொட்டி ஆறுகள், கடற்கரைகள், கோவில் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் நீர்நிலைகளில் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படித்துறையில் வழக்கமாக பொதுமக்கள் ஆடி, தை அமாவாசை நாட்களில் குடும்பத்துடன் வந்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி காலை 5 மணி முதல் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்களும் அங்கு வந்து படித்துறையில் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் எள்ளும், நீரும் இறைத்து நீராடினர்.

    இன்று காலை முதலே பாபநாசம் தொடங்கி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடை மருதூர், வீரவநல்லூர், நடுக்கல்லூர் வழியாக மாநகர பகுதிக்குள் தாமிரபரணி ஆறு செல்லும் வழித்தடங்களில் உள்ள கல் மண்டபங்களில் மக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில், தைப்பூச மண்டபம், மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து ஏரல், புன்னக்காயல் வரை மொத்தம் உள்ள 64 தீர்த்த கட்டங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் அரிசி மாவு, எள், தேன் கலந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து பின்னர் புனித நீராடி பொதுமக்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை முதலே அவர்கள் மோட்டார் சைக்கிள்கள், கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதன் காரணமாக குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், பேராட்சி அம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவில் பொதுமக்கள் திரண்ட தால் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர். அப்போது சிவனடியார்கள் திரண்டு சங்கொலி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி பகுதிகளில் வழக்கமாக தை அமாவாசை நாட்களில் பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை அருவிகளில் மிக குறைவாகவே தண்ணீர் விழுந்து வருகிறது.

    ஆனாலும் மெயினருவி கரையில் பொதுமக்கள் திரண்டு எள்ளும், நீரும் இறைத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். பின்னர் குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர். இதேபோல் பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலும் பொதுமக்கள் இன்று தர்ப்பணம் செய்தனர்.

    Next Story
    ×