search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தை அமாவாசை ஆலய வழிபாடு
    X

    தை அமாவாசை ஆலய வழிபாடு

    • ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.
    • தை அமாவாசையன்று இந்த ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    * தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

    * தை அமாவாசை என்றாலே, திருக்கடையூர் அபிராமி அம்மனும், அந்த அன்னையை தன்னுடைய 100 பாடல்களால் அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார்கள். ஏனெனில் தன் பக்தனான அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாகநடத்திக் காண்பிக்கப்படும்.

    * ராமேஸ்வரம் கடல் தீர்த்தம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் நீராடினாலும், பாவம் நீங்கி வாழ்வில் ஒளிபரவும் என்பது நம்பிக்கை.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று லட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபங்களால், அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும்.

    * திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.

    * கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை என்ற இடத்தில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம். இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.

    * மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.

    * திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் வீற்றிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் இணைந்து அருள்பாலிக்கிறார்கள். தைப்பட்டம் சாகுபடியை தொடங்குவதற்கு முன்பு, இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தை அமாவாசை அன்று இங்கு வந்து இறைவனை தாிசித்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனா்.

    * ராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று ராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும். அப்போது ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் கடலில் நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.

    Next Story
    ×