search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீகாளஹஸ்தி, காணிப்பாக்கம் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
    X

    ஸ்ரீகாளஹஸ்தி, காணிப்பாக்கம் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

    • 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டர்கள் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பங்கேற்றனர்.
    • இந்தக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வரை நீடிக்கும்.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் ‌கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசுலு மேற்பார்வையில் பக்தர்கள் வரிசைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் நடக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அத்துடன் கோவிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகளான சுப்ரபாத சேவை, ருத்ர ஹோமம், சண்டி ஹோமம், அர்ச்சனை, கல்யாண உற்சவம், கோ பூஜை, தீபாராதனை மற்றும் 4 கால ருத்ர அபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவில் அதிகாரிகள், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதி ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், விரைவு தரிசனம் செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×