search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வாழ்வை தடம் புரளச் செய்யும் மது- ஆன்மிக கதை
    X

    வாழ்வை தடம் புரளச் செய்யும் மது- ஆன்மிக கதை

    • சில தகாத காரியங்களைச் செய்யும் போது, புத்தி தடுமாறி உடலுக்குள் விபத்து ஏற்பட்டுவிடும்.
    • மதுவால் வாழ்வை தடம் புரளும் என்பதை விளக்கும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.

    அந்த நாட்டிற்கு, சக்தி வாய்ந்த குரு ஒருவர் வருகை தந்திருந்தார். வனப் பகுதியோரம் குடில் அமைத்து தங்கியிருந்த அவரை, பலரும் சந்தித்து தங்களின் துயரங்களைச் சொல்லி, தீர்வு கண்டு வந்தனர். குருவைப் பற்றி கேள்விபட்ட, அந்த நாட்டு மன்னனும், தன்னுடைய குடும்ப சகிதமாக, அவரைப் பார்ப்பதற்காகச் சென்றார்.

    மன்னனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உரிய மரியாதையை அளித்த குரு, அவர்களின் கேள்விகளுக்கு தக்க பதிலையும் வழங்கினார். அதில் மன்னனுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டது. குருவை நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக தன்னுடன் அரண்மனையில் வந்து சில நாட்கள் தங்கியிருந்து, தன்னுடைய ஆட்சிக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று, குருவிடம் வேண்டுகோள் விடுத்தார். குருவும் சம்மதம் தெரிவித்து, மன்னனுடன் அரண்மனைக்கு புறப்பட்டார்.

    அது 5 குதிரைகள் பூட்டப்பட்ட, மேற்கூரை வேயப்பட்ட பிரமாண்டமான தேர். அந்த தேருடன், மற்றொரு தேரும் இணைக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக இருந்த இணைப்புத் தேரில் மன்னர் குடும்பத்து பெண்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தனர். முதல் தேரில், மன்னர், அவரது பிரதான உதவியாளர், முதன்மை அமைச்சர்கள் இருவர், படைத் தளபதி மற்றும் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோருடன் குருவும் இருந்தார்.

    பயண தூரம் 5 மணி நேரத்தை தாண்டும் என்பதால், அனைவரும் உற்சாகமாகப் பேசிக்கொண்டே வந்தனர். அப்போது மன்னரின் ஆணைப்படி, அவரது உதவியாளர் அனைவருக்கும் சோமபானம் ஊற்றிக் கொடுத்தார். அனைவரும் அதைப் பெற்றுக்கொண்டனர். இறுதியாக குருவிற்கும், சோமபானத்தை ஊற்றிக் கொடுத்தார், அந்த உதவியாளர். ஆனால் அதை ஏற்க குரு மறுத்துவிட்டார்.

    இதனைக் கண்ட அரண்மனை முக்கியஸ்தர்கள் அனைவரும், "குருவே.. இது எங்கள் அரச குடும்பத்து மரபு. எங்களின் விருந்தாளிக்கு, உயர்ந்த வகையான சோமபானத்தை அளிப்போம். அப்படித்தான் இதை உங்களுக்கு வழங்குகிறோம். மறுக்காதீர்கள்" என்றனர்.

    ஆனால் குரு, "நான் ஒரு சிந்தனையாளன். நான் மது பருகுவது இல்லை" என்றார்.

    இப்போது மன்னர், "குருவே.. எனக்காக ஒரு துளியாவது பருகுங்கள். அப்படி நீங்கள் பருகிவிட்டால், உங்களாலேயே அதை விட முடியாது" என்று கூறினார்.

    ஆனால் குருவோ, "நீங்கள் என்னை மிகவும் வற்புறுத்துகிறீர்கள். எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இருந்தாலும் என்னுடைய சார்பில் இந்த சோமபானத்தை, குதிரைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து தேரை செலுத்திக் கொண்டிருக்கும் தேரோட்டியிடம் கொடுத்துவிடுங்கள்" என்றார்.

    அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். "ஐய்யய்யோ.. தேரை ஓட்டும் பணியில் இருக்கும் பணியாளரிடம், இந்த உயர்ந்த வகை சோமபானத்தை கொடுத்தால், அதைக்குடிக்கும் அவனது புத்தி தடுமாறி, குதிரையின் வேகத்தை அதிகரிக்கிறேன் என்று தேரை தறிகெட்டு ஓட்டிவிட்டால், நம் அனைவருடைய உயிருக்கும் அது ஆபத்தாக அமைந்துவிடும். அதனால் தேரோட்டிக்கு சோமபானத்தை அளிப்பது சாத்தியமில்லை" என்று பதறிப் போய் சொன்னார், மன்னர்.

    இப்போது முகத்தில் மெல்லிய புன்னகையை தவழ விட்ட குரு, "சரியாக சொன்னீர்கள் மன்னா.. நம்முடைய வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான். சில தகாத காரியங்களைச் செய்யும் போது, புத்தி தடுமாறி உடலுக்குள் விபத்து ஏற்பட்டுவிடும்" என்றார்.

    குருவின் உபதேசத்தில் இருந்த உண்மையை உணர்ந்த மன்னன், 'இனிமேல் சோமபானம் அருந்துவதில்லை' என்று முடிவெடுத்தான்.

    Next Story
    ×