என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் திருவிழா: கழுவனை விரட்டி உற்சாகமடைந்த இளைஞர்கள்
    X

    கழுவன் வேடமணிந்தவரை பக்தர்கள் கோவிலுக்குள் அழைத்து வந்த காட்சி.

    சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் திருவிழா: கழுவனை விரட்டி உற்சாகமடைந்த இளைஞர்கள்

    • கிராமத்து அம்பலகாரர்கள் கழுவனுக்கு மரியாதை செய்தனர்.
    • தன்னை விரட்டி வரும் இளைஞர்களை தீப்பந்தத்தால் கழுவன் விரட்டி சுடுவது அனைவரையும் கவர்ந்தது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக பிரமோத்ஸவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வரலாற்று சிறப்புமிக்க கழுனை விரட்டியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நின்றசீர் நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தபோது சமண சமயத்தை ஆதரித்தார். அப்போது பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைப்பிடித்தனர்.

    பாண்டிய மகாராணி அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தால் நெருப்பு வைத்தனர். இந்த கொடுஞ்செயலுக்கு துணை நின்றமைக்காக பாண்டிய மன்னன் மீது கடும் கோபமுற்றனர். பாண்டிய மன்னனை வெப்பு நோய் தாக்கியது. சமணர்கள் முயன்றும் நோயை குணப்படுத்த முடியவில்லை.

    மகாராணி நோயை குணப்படுத்த திருஞான சம்பந்தரை அழைத்தார். திருஞான சம்பந்தர் திருநீற்று பதிகம் பாடி திருநீற்றை தந்து நோயை குணப்படுத்தினார். தீராத நோய் குணமாகியதால் மன்னன் சைவ சமயத்தை தழுவினான். இதனால் கோபமுற்ற சமணர்கள் புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சைவர்களை அழைத்தனர்.

    இதில் தோற்றால் மன்னன் தங்களை கழுவேற்றலாம் என்றார்கள். இந்த போட்டியில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்பந்தரின் ஏடுகள் எதிர்திசையில் மிதந்து வந்தன. திருஞான சம்பந்தர் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த சமணர்களை கழுவேற்ற பாண்டிய மன்னன் ஆணையிட்டதாகவும் பெரியபுராணம் கூறுகிறது. இதனை நினைவுகூறும் வகையில் இந்த கழுவன் திருவிழா நடைபெறுகிறது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 6-ம் நாளானன்று கொடூர கழுவன் விரட்டும் விநோத திருவிழா நள்ளிரவில் நடைபெற்றது.

    உடல் முழுவதும் கருப்பு சாயம் பூசி முகத்தை மறைக்கும் ஜடா முடி அலங்காரம், அரைஞான் கயிற்றில் ஜடா முடியால் ஆடை, கோரமான உருவத்தில் திகிலூட்டும் தீவட்டியுடன் உலாவந்த கழுவனை விரட்டி பிடித்த மக்கள் மற்றும் இளைஞர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

    திகிலூட்டும் அலங்காரத்துடன் உடல் முழுவதும் கரிபூசிய சாயம், ஆட்டு ரத்தம், ஆட்டுக்குடல்களுடன் கோவிலுக்குள் அழைத்து வந்து பலி கருப்பன சுவாமியிடம் அருள்பெற்று ஸ்ரீசேவுகப்பெருமாள் சுவாமி எழுந்தருளியுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நாட்டார்கள் முன்னிலையில் பணிவுடன் தவழ்ந்து வந்த கழுவனுக்கு அங்கு குவிந்திருந்த பக்கதர்கள் கூட்டம் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    அங்கு கோவில் சார்பில் கழுவனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டு சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து, கிராமத்து அம்பலகாரர்கள் கழுவனுக்கு மரியாதை செய்தனர். கழுவன் விரட்டும் நிகழ்ச்சியில் உற்சாகமடைந்த இளைஞர்கள் பட்டாளம் கழுவனை விரட்டுவதும், தன்னை விரட்டி வரும் இளைஞர்களை தீப்பந்தத்தால் கழுவன் விரட்டி சுடுவதும் அனைவரையும் கவர்ந்தது.

    ஆண்டுதோறும் நள்ளிரவில் நடைபெறும் இந்த விழாவை காண ஜாதி, மதம் வேறுபாடின்றி அனைத்து சமுதாய மக்களும் கோவிலில் திரண்டனர்.

    Next Story
    ×