என் மலர்
வழிபாடு

முருகன் புகழ்பாடும் திருமுருகாற்றுப்படை
- பத்துப்பாட்டில் முதலாம் நூலாக திருமுருகாற்றுப்படை உள்ளது.
- திருமுருகாற்றுப்படையை அருளியவர் நக்கீரர் என்னும் செந்தமிழ் புலவர்.
தமிழ்மொழியின் சங்க இலக்கியங்களுள் முதன்மை தொகுப்பாகிய பத்துப்பாட்டில் முதலாம் நூலாக திருமுருகாற்றுப்படை உள்ளது. சங்க கால மக்கள் தமிழின் சிறப்பையும், தமிழ்கடவுளான முருகப்பெருமானின் சிறப்பையும் நன்கு அறிந்து உள்ளனர் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. திருமுருகாற்றுப்படையை அருளியவர் நக்கீரர் என்னும் செந்தமிழ் புலவர். இந்த புலவரின் பெருமையை "வில்லுக்கு சேரன், சொல்லுக்கு நக்கீரன்" என்ற பழமொழியின் மூலம் அறியலாம்.
பத்துப்பாட்டில் முதல்பாட்டாய் விளங்கும் திருமுருகாற்றுப்படையை பல வகைகளில் நாம் பயனடையலாம். இது ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான அடிப்படை உண்மைகளை நமக்கு தருகிறது. இந்த திருமுருகாற்றுபடை நூல் என்பது பரிசு பெற்ற புலவன், பரிசு பெற விரும்பும் புலவனிடம் அளிக்கும் பரிசு என முன்னோர்கள் கூறுகின்றனர். அதாவது, நாம் உடலோடு ஒட்டி வாழும்போதே, இறைவனின் திருவருளை பெற நக்கீரன் போன்ற புலவர்கள் நமக்கு அளித்த பரிசுதான் திருமுருகாற்றுப்படை நூல்.
முருகப்பெருமானின் திருவருளில் நம்பிக்கை கொண்டு திருமுருகாற்றுபடை நூலை படித்து வழிபடும் கணமே முருகன் நமக்கு அருள்புரிவான் என்பதை "நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே" என்ற பாடல் மூலம் அறியலாம். அழியாத புகழை உடையவன் முருகன். அவன் திருக்கையில் இருக்கும் வேல் அடியார் உள்ளத்து இருளை அகற்றும் வல்லமை கொண்டது. எனவே செம்மையான திருமுருகாற்றுப்படை நூல் மூலம் வேலவனை தினமும் தியானிக்க வேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் வீடுபேறு அடையலாம்.
செல்வக்குமார்ஸ்ரீ கந்தவிலாஸ் பழனி.






