search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா: பங்காரு அடிகளார் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார்
    X

    மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா: பங்காரு அடிகளார் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார்

    • வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது.
    • பக்தர்கள் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 52-ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மங்கள இசையு டன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அலங்கா ரத்துடன் தீபாராதனை செய்து வேள்வி பூஜையுடன் ஆடிப்பூர விழா கோலாகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி சித்தர் பீட வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியை பக்தர்களுக்கு கஞ்சி கலயங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பல லட்சம் பக்தர்கள் கஞ்சி கலயங்களை கையில் சுமந்தபடி சென்று கருவறை முன்பாக ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டு பின்னர் பள்ளி வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கொப்பரை பாத்திரத்தில் ஊற்றினர். அது சமத்துவ கஞ்சியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    காலை 9 மணி அளவில் அன்னதான பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதி பராசக்தி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 10 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்திருந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து 10.15 மணியளவில் ஆதிபராசக்தி கருவறை முன்பு இருக்கும் சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பால் அபிஷேகம் செய்து விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ரெயில்வே பொது மேலாளர் ஜெயந்த், முன்னாள் தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் அருள்மொழி, முன்னாள் நீதிபதி முருகேசன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆடிப்பூர தினமான இன்று சனிக்கிழமை காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கருவறை முன்பாக உள்ள சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யவுள்ளனர்.

    நிகழ்ச்சிகளில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், வேளாண்மை கல்லூரி தாளாளர் உமா தேவி ஜெய்கணேஷ், செவிலியர் கல்லூரி தாளாளர் ஸ்ரீலேகா செந்தில் குமார், டாக்டர் மதுமலர், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் வழிகாட்டு தலில் இயக்கத்தின் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மன்றங்கள் மற்றும் சக்திபீடங்களை சார்ந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து மாவட்ட தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரஸ்வதி, சதாசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×