என் மலர்
வழிபாடு

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா இன்று தொடங்குகிறது
- 13-ந்தேதி பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- 14-ந்தேதி அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
13-ந்தேதி பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதுசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விழா குறித்து, அறங்காவல் வாரியத்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன் கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாங்கனி திருவிழா கோவில் பிரகாரத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று, மாங்கனி திருவிழாவை வழக்கம் போல், வெகு விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்விழா, 4 நாட்கள் நடக்கும். பாதுகாப்பு பணிக்காக, காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடவுள்ளனர்.
60 சி.சி.டி.வி. கேமரா வைத்துள்ளோம். முக்கியமாக, மாங்கனி இறைப்பின் போது, அர்ச்சனை செய்ய வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் தட்டுகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்யவேண்டுகிறோம். முடியாதவர்களுக்காக, நாங்கள் மூங்கில் தட்டுகளை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்படி, பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






