search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தியில் கதை..
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தியில் கதை..

    • ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு
    • கன்னியாகுமரி பகவதி அம்மனின் மூக்குத்தி கதையை அறிந்து கொள்ளலாம்.

    ஒளிமிக்க கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோகசக்தியின் வெளிப்பாடு என்பதால் பக்தர்களின் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது. மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு, ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பிறந்திருந்தன. நான்காவதாக பனை தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார்.

    அந்த பிரசவத்திலும் பெண் குழந்தையே, பிறந்தது. அதை அவரது மூத்த மகள் தன் தந்தையிடம் வந்து சொன்னாள். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தவருக்கு பெருத்த ஏமாற்றம். 5-வது முறையாக மனைவி கருவுற்றிருந்தார். இப்போதும் பெண் குழந்தையே பிறந்தது. பனை மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த தந்தையிடம், அவரது மூத்த மகள் இந்த விஷயத்தையும் சொன்னாள். அவரது மனம் இப்போது 'அடுத்த முறை பெண் குழந்தை பிறந்ததாக, தன் மகள் வந்து என்னிடம் சொன்னால், மரத்தில் இருந்து இரண்டு கைகளையும் எடுத்து விட்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்' என்று முடிவெடுத்தார்.

    6-வது முறையும், அந்த தொழிலாளியின் மனைவிக்கு பெண் பிள்ளையே பிறந்தது. அந்த விஷயத்தை அவரது மூத்த மகள் அவரிடம் சொல்ல வந்தபோது, அந்த தொழிலாளி மரத்தை விட்டு கீழே இறங்கியிருந்தார். அதனால் உடனடியாக தற்கொலை செய்து கொள்வது இயலாமல் போனது. அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்த போதும், அவரது மூத்த மகள் தன்னுடைய தந்தை மரத்தை விட்டு கீழே இறங்கியதும்தான் சொன்னாள்.

    வாழ்க்கையே வெறுத்துப்போன தொழிலாளிக்கு அருகில் இருந்த புற்று தென்பட்டது. அதற்குள் கையை நுழைந்தார். 'புற்றுக்குள் பாம்பு ஏதாவது இருந்து கடித்தால், இறந்து போய்விடலாம்' என்பது அவரது எண்ணம். தெய்வம் நினைத்தால் தானே எதுவும் நடக்கும். புற்றுக்குள் கையை நுழைத்த தொழிலாளி, ஏதோ ஒன்று சுடுவது போன்று உணர்ந்தார்.

    சட்டென்று கையை எடுத்தவரின் கையோடு வந்தது, அந்த மாணிக்கக் கல். அதைக் கொண்டு போய் மன்னனிடம் கொடுத்தார், அந்த பனை தொழிலாளி. அதைப் பெற்றுக்கொண்ட மன்னன், அவரது குதிரையை அவிழ்த்து விட்டு, அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ, அவ்வளவு இடத்தையும் அந்த தொழிலாளியின் பெயரில் எழுதிவைக்கச் சொன்னார். மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார் தொழிலாளி. இல்லை... இல்லை.. பல ஏக்கம் நிலத்திற்கு சொந்தக்காரர்.

    அன்று இரவு திருவிதாங்கூர் மன்னனின் கனவில் தோன்றிய சிறு பெண், "இன்று காலை ஒரு பனை தொழிலாளி உன்னிடம் ஒரு மாணிக்கக் கல் கொண்டு வந்து கொடுத்தாரே.. அதில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து தரக்கூடாதா?" என்று கேட்டாள். காலையில் எழுந்ததும், நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்கச் சொன்னார் மன்னன். அப்படி பிரசன்னம் பார்த்ததில், கனவில் தோன்றிய சிறுமி, கன்னியாகுமரி பகவதி அம்மன் என்பது தெரியவந்தது.

    மன்னன் உடனடியாக தன்னிடம் இருந்த மாணிக்கக் கல்லில் ஒரு மூக்குத்தியை செய்து அதை தேவிக்கு சமர்ப்பித்தான். அந்த மூக்குத்தியைத்தான், இன்றளவும் பகவதி அன்னை அணிந்திருக்கிறாள். அந்த மாணிக்கக் கல்லின் ஒளி பன்மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால், அன்னையின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்கம் என்று நினைத்த கப்பலோட்டிகள் பலரும் விபத்துக்களை சந்திக்க நேர்ந்தது. எனவே ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு, தெற்கு வாசல் வழியாக சென்று தேவியை தரிசிக்கும் நடைமுறை பழக்கத்திற்கு வந்தது.

    Next Story
    ×