search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிறரின் திறமைகளை அங்கீகரிப்போம்
    X

    பிறரின் திறமைகளை அங்கீகரிப்போம்

    • மனித வாழ்க்கை மிகவும் அபூர்வமானது, அழகானது.
    • இறைவனின் அன்பையும், அருளையும் பெற்று சிறப்பாக வாழத்தகுந்தது.

    "சக மனிதருடைய திறமையை அங்கீகரியுங்கள். அப்போது இறைவன் உங்கள் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்து, உங்களையும் அங்கீகரிப்பார்."

    அன்பானவர்களே, மனித வாழ்க்கை மிகவும் அபூர்வமானது, அழகானது. இறைவனின் அன்பையும், அருளையும் பெற்று சிறப்பாக வாழத்தகுந்தது.

    அதனால் தான், "உன்னைப்போல பிறரையும் நேசிக்க வேண்டும்" என்று இறைமகன் கூறியுள்ளார்.

    ஆனால், நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்று சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை நாம் அங்கீகரிக்கின்றோமா, அல்லது அவர்களை குறைகூறி மட்டம் தட்டுகின்றோமா?. நம்முடன் இருப்பவர்களை நாம் பாசத்துடனும், பரிவுடனும் நடத்துகிறோமோ? நாம் எப்படிப்பட்டவர்கள், நமது நடத்தை எப்படி உள்ளது என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

    நம்மில் அனேகருக்கு, அவர்கள் வசித்து வரும் சொந்த ஊரில் அல்லது அவர்களுடைய வீட்டில் கூட அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. நாம் ஏதாவது ஒரு புதிய கருத்தைக் கூறினாலோ அல்லது படிப்பில், தொழிலில், பணிபுரியும் இடத்தில் திறமையானவர்களாக இருந்தாலும், எந்த அளவுக்கு நம்மை மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவுக்கு நம்மை உதாசீனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ஆனால், இறைவனின் கருணையால் அதே நபர் ஒரு உச்சத்தைத் தொட்டவுடன், 'இவர் என்னுடைய உறவினர், என் ஊர்க்காரர்' என்று கூறிப் பெருமை கொள்பவர்களும் உள்ளனர்.

    கர்த்தராகிய இயேசு, இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் தம்மிடத்தில் வந்த நோயாளிகளின் அனைத்து வியாதிகளையும் குணப்டுத்தினார். கானா என்ற ஊரிலே திருமண வீட்டில் திராட்சை ரசம் குறைவுபட்ட போது, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். மரித்து நான்கு நாளாகி, அழுகிப்போன லாசருடைய உடலை, உயிர்பெறச் செய்தார்.

    இவ்வாறு ஏராளமான அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தவராக, எல்லா மனிதர்களிடத்திலும் அன்பு கூர்ந்தவராக, நன்மை செய்கிறவராக கர்த்தர் இருந்தார்.

    அவர் தன்னுடைய சொந்த ஊரான கலிலேயாவுக்கு வந்து, அங்குள்ள ஜெப ஆலயத்தில் மக்களுக்கு ஞானத்துடன் உபதேசம் பண்ணினார்.

    அப்பொழுது அவர்கள் இதுகுறித்து ஆச்சரியப்பட்டனர். "இவனுக்கு இந்த ஞானமும், பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? இவனுடைய சகோதர சகோதரிகள் எல்லாம் நம்மிடத்தில் அல்லவா இருக்கிறார்கள்? இவனுக்கு மட்டும் இந்த ஞானம், வல்லமை எப்படி வந்தது?" என்று சொல்லி அவரைக் குறித்து, ஏளனமாய் பேசினார்கள்.

    இயேசு அவர்களை நோக்கி; "தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்" என்றார்.

    அவர்கள் அவரை நம்பாததால், அவர் அங்கு அனேக அற்புதங்களை, நன்மைகளை செய்யவில்லை.

    அன்பானவர்களே, இன்று இதே நிலை ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீட்டில், ஊரில், உடன் இருப்பவர்களால் ஏற்படுகின்றது. ஆகவே, நாம் பிறருடைய திறமைகளை அங்கீகரிப்போம். அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவோம்.

    அப்போது அவர்களின் திறமை வெளிப்படும். இதன் மூலம் அவரது குடும்பத்திற்கும், அவர் வாழும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் நன்மைகள் கிடைக்கும். இதன்மூலம், இறைவன் நம்முடைய திறமைகளையும் அங்கீகரித்து, நம்மையும் எல்லாவற்றிலும் மேன்மையடையச் செய்வார்.

    அனைவரையும் மதித்துப்போற்றுவோம், நற்சிந்தனைகளால், அன்பான சொற்களால் அனைவரையும் உற்சாகப்படுத்தி நற்செயல்கள் செய்ய தூண்டுவோம்.

    வாருங்கள், அன்பான மனித சமுதாயம் உருவாக நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்.

    நெல்லை மானெக்ஷா.

    Next Story
    ×