search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற என்ன செய்ய வேண்டும்?
    X

    இறைவனின் ஆசீர்வாதத்தைப்பெற என்ன செய்ய வேண்டும்?

    • விவிலியத்திலுள்ள வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒரு நிபந்தனையுடன் தான் வருகின்றன.
    • வசனங்களை முழுமையாய்ப் படித்து புரிந்து கொள்வோம்.

    இன்சூரன்ஸ் வாங்கும்போது அதில் பளபளப்பான, வசீகரமான வாக்குறுதிகள் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். விற்பனை செய்யும் நிறுவனமும் அதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லி நம்மை மூளைச் சலவை செய்யும். விண்ணப்பத்தின் கடைசியில் நட்சத்திரக் குறியிட்டு, 'சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது' என நிறைய விஷயங்களைப் போட்டிருப்பார்கள். அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

    ஒரு தேவைக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகும் போது அவர்கள் அந்த வசீகரக் கொட்டை எழுத்துத் தகவல்களைக் கண்டு கொள்வதில்லை, அந்த நட்சத்திரக் குறியிட்ட சட்டதிட்டங்கள் என்ன சொல்கின்றன என்பதையே பார்ப்பார்கள்.

    'சாரி... உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது, ஏன்னா நீங்க இதைச் செய்யல. அல்லது இதை தப்பா செஞ்சுட்டீங்க' என மிகப்பெரிய முட்டுக்கட்டைகளைப் போட்டு நம்மை அதிர்ச்சியடையச் செய்வார்கள்.

    அப்படித் தான் பல வசனங்களை கிறிஸ்தவர்கள் இன்று பயன்படுத்துகிறார்கள். "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்" எனும் பிரபல வசனம் ஒன்று உண்டு. போட்டோக்களிலும், காலண்டர்களிலும் அதை எங்கும் காணலாம். அதை வீட்டின் வரவேற்பறையில் தொங்க விட்டுக்கொண்டு, 'நம்ம வாழ்க்கை இனிமேல் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல் இருக்கும்' என நினைத்துக் கொள்பவர்கள் எக்கச்சக்கம்.

    உண்மையில் இது பாதி வசனம் தான், இதன் முழுமையான வசனம் அதற்கு முன் வருகிறது. நட்சத்திரக் குறியிட்ட சட்ட திட்டங்களைப் போல.

    "பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால் நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்…" என்பதே முழுமையான வசனம்.

    நாம் செய்ய வேண்டியதை வசதியாக உதறிவிட்டு, கடவுள் ஆசி வழங்குவார் என நம்புகிறோம். அழகான அட்டைகளில் பாதி வசனங்களை மட்டும் எழுதி வரவேற்பு அறையில் தொங்கவிட்டு ஓய்வு எடுக்கும் போது அது 'பயனற்ற வழிபாட்டுக்கு இணையான செயலாக' மாறிவிடுகிறது.

    வெறுமனே பிரியாணி, பிரியாணி என வாசித்துக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடுவதில்லை. நல்ல சிலிர்ப்பூட்டும் வசனங்களை அரைகுறையாய் வாசித்துக் கொண்டே இருப்பதால் வாழ்வு மலர்ந்து விடுவதில்லை. இதை மனதில் கொள்ளவேண்டும்.

    ஆறுதலான மகிழ்ச்சியான வசனங்களை அடிக்கடி பார்ப்பதும், படிப்பதும் நல்லது தான், ஆனால் அந்த வசனங்கள் உண்மையிலேயே நமது வாழ்க்கையில் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதையே கவனிக்க வேண்டும்?

    "35 மதிப்பெண்கள் வாங்கினால் நீ பாசாவாய்". இப்படி ஒரு அறிவிப்பு பள்ளிக்கூட பலகையில் எழுதப்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதை மாணவர்கள் பார்க்கின்றனர். ஒருவன் குறைந்த பட்சம் 35 மார்க் வாங்க வேண்டும் என மனதில் எழுதிக்கொள்கிறான். அதற்காக உழைக்கிறான்.

    இன்னொருவனோ கடைசி இரண்டு வார்த்தைகளான, "நீ பாசாவாய்" எனும் வார்த்தைகளை மனதில் எழுதுகிறான். திரும்பத்திரும்ப அதையே மனதில் சொல்லிக் கொள்கிறான். ஆனால் படிக்கவில்லை. கடைசியில் யார் வெற்றியடைவார்? யார் தோல்வியடைவார்? என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    விவிலியத்திலுள்ள வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒரு நிபந்தனையுடன் தான் வருகின்றன. அதை அறிந்தும் அறியாதது போல நாம் நடந்து கொள்வதும், எல்லாம் நடக்கும் என மூட நம்பிக்கை கொள்வதும் வேடிக்கை தான்.

    உதாரணமாக, "கர்த்தரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்" எனும் வசனத்தை பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். பல விஷயங்களை நாம் நமது விருப்பப்படி ஆரம்பித்து விட்டு, "கர்த்தரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்" என நம்பிக்கொள்கிறோம்.

    சங்கீதம் 37:5 சொல்வது இதைத் தான்: "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்".

    திருவிவிலியம் இதை "உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்" என்கிறது.

    அதாவது இரண்டு விஷயங்களை நாம் செய்தால் தான் கடவுள் அந்த செயலை நிகழ்த்திக் காட்டுவார். ஒன்று, நமது வழியை ஆண்டவரிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது, அவரையே நம்பியிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்று பிழைத்தாலும் அது நடைபெறாது.

    கடவுளிடம் வழியை ஒப்படைக்கிறோம், ஆனால் நம்பவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். "உன் விசுவாசத்தின் படியே உனக்கு ஆகட்டும்" என கடவுள் சொல்லி விடுவார்.

    கடவுளிடம் வழியை ஒப்படைக்காமல், அவரை நம்புகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். "விதைக்காத இடத்தில் அறுவடை செய்ய முயல்வதைப் போல" அது முடிந்து விடும்.

    எனவே, அரைகுறை வசனங்களைப் பேசி நம்மை துண்டிவிடுபவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்போம். வசனங்களை முழுமையாய்ப் படித்து புரிந்து கொள்வோம். எந்த ஒரு ஆசீர்வாதத்தைப் பெறவும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவோம். இறைவனின் வழியில் நிலைத்திருப்போம்.

    சேவியர், சென்னை.

    Next Story
    ×