search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    என் மீட்பர் உயிரோடிருக்கிறார்
    X

    என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

    • தற்போது நீங்கள் சந்திக்கிற சகல பிரச்சினைகளைக் குறித்து மனம் துவண்டு போகாதீர்கள்.
    • ஜீவனுள்ள ஆண்டவரிடத்தில் உங்களைப் பூரணமாய் அர்ப்பணித்து, விசுவாசத்தோடு துதியுங்கள்.

    அன்பானவர்களே! நம் அருமை ஆண்டவர் இன்றும் ஜீவிக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

    அவருடைய வருகையை எதிர்நோக்கி இருக்கிற நாம் ஒவ்வொருவரும் அவருக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. தற்போது நீங்கள் சந்திக்கிற சகல பிரச்சினைகளைக் குறித்து மனம் துவண்டு போகாதீர்கள். ஜீவனுள்ள ஆண்டவரிடத்தில் உங்களைப் பூரணமாய் அர்ப்பணித்து, விசுவாசத்தோடு துதியுங்கள்.

    உங்களுக்காக, எனக்காக மரித்த ஆண்டவர் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, தாம் உயிரோடிருக்கிறேன் என்று தம்முடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தின சில சந்தர்ப்பங்களை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். வாசித்து சந்தோஷமாய் துதியுங்கள்.

    'வாரத்தின் முதல்நாளாகிய அன்றையதினம் சாயங்கால வேளையிலே, சீடர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்'. யோவான் 20:19

    பிரியமானவர்களே! வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் உயிரோடெழுந்த அருமை ஆண்டவர் அன்று மாலை நேரத்தில் தம்முடைய சீடர்களுக்கு தரிசனம் கொடுக்க அவர்கள் கூடியிருந்த அறைக்கு சென்ற போது வேதம் தெளிவாக சொல்லுகிறது. அவர்கள் யூதர்களுக்கு பயந்து தங்கள் கதவு களையெல்லாம் பூட்டிக்கொண்டு நடுக்கத்தோடு காணப்பட்டார்கள். இதற்கு ஒரே காரணம் அவர்களுக்குள் இருந்த பயம்.

    அந்த வகையில் பயத்தின் ஆவியினால் பாதிக்கப்பட்ட தம்முடைய சீடர்களை விடுவிக்க தாமே அவர்கள் அறைக்கு இயேசு சென்றார்.

    உங்கள் வீட்டுக்குள் ஏதாகிலும் ஒரு பயத்தோடு கலக்கத்தோடு இருந்தால் நான் உங்களுக்குக் கூறுகிற ஒரே ஒரு வார்த்தை 'என் மீட்பர் உயிரோடிருக்கிறார்'. சகல பயத்திலிருந்தும் உங்களை விடுதலையாக்கி மன சமாதானத்தையும், சந்தோஷத்தையும் உங்களுக்குத் தருவார்.

    'மற்றச் சீடர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று தோமாவிடம் சொன்னார்கள், அதற்கு அவன்: அவருடைய கைகளில் அணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன் என்றான்'. யோவான் 20:25

    தோமாவை சந்தேக ஆவி பிடித்திருந்தது. ஆகவே தான் இயேசுவின் காயத்தை நான் கண்டு காயத்தில் என் விரலையிட்டு அவருடைய விலாவில் என் கையை போடவேண்டும் என்று கூறினார்.

    ஆனால் நம் அருமை ஆண்டவரோ, 8 நாளைக்குப் பிறகு மீண்டும் தோமாவுக்காக மறுபடியும் சீடர்களை சந்திக்கச் சென்றார். அந்த சந்திப்பு தோமாவின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது. அதன் விளைவாக எந்த அப்போஸ்தலரும் பிரயாணம் பண்ண இயலாத அளவுக்கு நீண்ட தூரம் பிரயாணம் பண்ணி நம் இந்தியாவுக்கு வந்து சுவிசேஷம் அறிவித்து சென்னையில் ரத்த சாட்சியாக மரித்தார்.

    நம்முடைய ஆண்டவர் ஒருவரை ஒருமுறை அழைத்துவிட்டால், அவர்களை தெரிந்து கொள்வார். எனினும் பிசாசானவன் எந்த அளவுக்கு அப்படிப்பட்டவர்களை தன்னுடைய மாய வலைக்கும், உலகத்துக்குள்ளும் இழுத்துக் கொண்டு சென்றாலும், அவர்களை எப்படியாகிலும் தப்புவித்து தம்முடன் இழுத்துக் கொள்வார் என்பதற்கு யோவான் 21:1-4 வசனங்கள் நம் அனைவருக்கும் ஆதாரமாகும்.

    அன்பானவர்களே! ஒரு வேளை நீங்களும் இந்நாட்களில் வாழ்வில் தோல்வியடைந்து, சோர்ந்து போய் பலவிதமான உலகக் கவலையினால் பாதிக்கப்பட்டு இருந்தால், மனம் கலங்காமல், கடந்த வாழ்வின் தவறுகளை உணர்ந்து சிலுவையின் பக்கம் திரும்புங்கள். நிச்சயம் உங்கள் பின்னடைவு முடிவுக்கு வரும். ஒரு புதிய ஆரம்பம் உங்கள் வாழ்வில் தோன்றும்.

    ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை.

    Next Story
    ×