search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தொழிலில் சரிவை சந்தித்தால் எதிர்கொள்வது எப்படி?
    X

    தொழிலில் சரிவை சந்தித்தால் எதிர்கொள்வது எப்படி?

    • தோல்வி என்பது நம்மை தகுதியற்றவர் என்று நிராகரிக்கவில்லை.
    • உழைப்பாளிகள் தோற்றதாக வரலாறே கிடையாது.

    தொழில் முனைவர், திட்ட அறிக்கைகளை தயாரித்து அவற்றின்படி நிறுவனத்தை நடத்துவது ஒரு புறம் இருக்க, தொழிலை தொடங்குவதற்கு முன்பே இது போன்ற வேறு சில கேள்விகளையும் அவர் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

    தொழில் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் சரிவை சந்தித்தால் என்ன வகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

    ஆறு மாத்திற்குள்ளோ, அல்லது ஆறு மாதங்கள் கழித்தோ சரிவை சந்தித்தால் என்ன செய்யலாம்?

    ஒரு ஆண்டிற்கான குறைந்த பட்ச வருவாயை ஈட்டுவதற்கு உத்தரவாதம் தரக்கூடிய வழிவகைள் என்ன?

    ஒருவேளை தொழில் மிகப் பிரமாதமான வெற்றியை பெற்றால் அதற்கேற்றவாறு எப்படி விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

    இப்படி தமக்குள் பல கேள்விகளை கேட்டு அதற்கான விடைகளை தெளிவாக தொழில்முனைவோர் முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். தேர்வுக்கு செல்கின்ற மாணவர்கள் எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதிலை தயாரித்து வைத்திருக்கிறார்களோ அது போலத்தான் தொழில்முனைவரும் தங்களை தயாரித்து கொள்ள வேண்டும். தொழில் தொடங்கிய பிறகு ஏற்படும் எந்த ஒரு நிகழ்வும் ஒரு தொழில் முனைவோருக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளிக்க கூடாது. ஒரு தொழில் முனைவோரின் பலமே சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உடனுக்குடன் காய்களை மாற்றி நகர்த்துவது தான்!

    வெற்றிக்கு விளக்கங்கள் தேவை இல்லை. ஆனால் தோல்வி அடைந்த பிறகு நீங்கள் மேற்கொண்ட முடிவுகளுக்கெல்லாம் காரணங்களை சொல்லியாக வேண்டும். ஒருவர்தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த நிலையும் மாறும் என்ற மனோதிடம் இருந்தால் மீண்டும் வெற்றிக்கனியை பறித்துவிட முடியும். தோல்வியை நாம் இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். ஒன்று, தோல்வியை நீங்கள் எப்படி உள்வாங்குகிறீர்கள்? இரண்டாவது, தோல்வியை நீங்கள் எப்படி வெளி உலகிற்கு சொல்கிறீர்கள்? தோல்வி என்பது என்ன? நினைத்த இலக்கை அடையாதிருத்தல் தான் தோல்வி ஆகும். அப்படியானால் தோல்வியானது நிரந்தரமானதல்ல.

    நாம் அடுத்த சில ஆண்டுகள் கழித்து அந்த இலக்கை அடைந்தோமானால் தோல்வியே கூட வெற்றியாக மாறி விடும். எனவே தோல்வி ஏற்படும் போது அதை தோல்வியாக கொள்ளாமல் வெற்றி தள்ளிப்போவதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

    எது நடப்பினும் அது நல்லதற்கே என்று நினையுங்கள், கரியானது பூமியில் அமுங்க, அமுங்கத்தான் வைரமாக மாறும். உங்களிடம் இருக்க கூடிய ஏதோ ஒரு திறமையை வெளிக்கொணர்வதற்காகத் தான் இந்த தோல்வி உங்களுக்கு ஏற்பட்டது என்று கருதிக் கொள்ளுங்கள்.

    நீங்கள் சிந்தித்த அளவு போதாது என்பதை தான் அது சொல்கிறதே தவிர, நீங்கள் சிந்திக்கவே இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் உழைத்த அளவு போதாது என்பதை தான் அது சொல்கிறதே தவிர, உழைக்கவே இல்லை என்று மறுக்கவில்லை.

    ஆக தோல்வி என்பது நம்மை தகுதியற்றவர் என்று நிராகரிக்கவில்லை. இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறது. இனி உலகிற்கு தோல்வியை எப்படி அறிவிக்கப்போகிறீர்கள்? இது போன்ற தொழில்கள் ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். போகப்போக மிகுந்த லாபம் தரும் என்றும் வெற்றிக்கு முந்தைய படியில் நான் நின்று கொண்டிருக்கிறேன் என்றும் நேர்மறையாகவே வெளியில் சொல்லுங்கள்.

    அது போல் சிரித்த முகத்துடன் இன்னும் கூடுதலாக உழைக்க தொடங்குங்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எந்த தோல்வியும் இவரை தடுத்துவிட முடியாது என்று நினைக்க வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் வேகம் அதிகரிக்க வேண்டும்.

    ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். திறமைசாலிகள் தோற்கலாம். தந்திரசாலிகள் தோற்கலாம். ஆனால் உழைப்பாளிகள் தோற்றதாக வரலாறே கிடையாது...!

    Next Story
    ×