search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மனித உருவில் இறைமகன்
    X

    மனித உருவில் இறைமகன்

    • நன்மை ஒருபோதும் சாகாது.
    • உண்மை உலகிற்குள் உறங்காது.

    இயேசு மண்ணில் மனித உருவில் வந்த இறைவன். அதனால் அவர் தம்மை இறைநிலையில் இணைத்துக்கொண்டு மனிதத்தைப் புறந்தள்ளி வாழ்ந்தவரல்ல. சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதருக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.அவரது முழுமையான தியாகமிகு அர்ப்பணம் கல்வாரியில் சிலுவைக் கழுமரத்தில் அரங்கேறியது.அதுவே அவரது சிறப்பான வாழ்வின் வேள்வி.

    இயேசு மனித உருவில் மண்ணில் வாழ்ந்து சமூக வீதிகளில் நடமாடியபொழுது அவர் புரிந்து கொள்ளப்படவோ ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. அவரது சிந்தனைகள், செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டன. அவரது மனிதநேயப் போதனைகள் இறைநிந்தையாகக் கருதப்பட்டன. அவரது அணுகுமுறைகள் சட்டமீறலாகவும் கலகமாகவும் சித்தரிக்கப்பட்டன.ஆயினும் இயேசு தயங்காமல் துணிந்து இலட்சியத்தோடு உழைத்தார். எல்லாரும் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் தங்களுக்குள் சகோதர உணர்வோடு வாழ வேண்டும். இனம், நிற மொழி சமயம், பணம் என எப்பாகுபாடும் மாந்தருக்குள் இருக்கக்கூடாது எனப் பகிரங்கமாக முழங்கியதோடு அவைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தார். அதனால் அவர் ஆதிக்கவாதிகளால் எதிர்க்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆயினும் அடக்கப்பட்ட கல்லறை உடைத்து அவர் உயிர்த்தெழுந்தார்.

    இயேசுவின் உயிர்ப்பு வெறுமனே உடலளவில் நிகழ்ந்த ஒன்று அல்ல. அது உலகில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்பட்ட மாற்ற நிகழ்வு. இயேசு கல்லிலானக் கல்லறையை மட்டும் உடைத்து உயிர்க்கவில்லை. மாறாக பிறரை ஒதுக்கல், ஒடுக்கல், ஒதுங்கல் என்ற கற்களை உடைத்து உயிர்த்தார். சமூகத்தில் தலைவிரித்தாடிய ஆளல், அடக்குதல், அவமதித்தல், பழித்தல், பகைத்தல், வெறுத்தல், சிறுமைப்படுத்துல், பதுக்குதல், உரிமைகள் மறுத்தல் போன்றத் தடைகளை உடைத்தெறிந்தார்.

    இனி நன்மை ஒருபோதும் சாகாது.உண்மை உலகிற்குள் உறங்காது.நீதி என்றும் அழியாது.பொதுநலம் ஒருபொழுதும் பிறழாது எனப் பறைசாற்றுவதே இயேசுவின் உயிர்ப்பு, அதற்கு நமக்கு இரு சான்றுகள் உள்ளன. முதலாவது இயேசு அடக்கம் செய்யப்பட்ட வெறுமையானக் கல்லறை. இரண்டாவது ஏழைகளாகவும் கோழைகளாகவும் இருந்து ஓடி ஒளிந்து மீண்டும் புது உத்வேகத்தோடும் நம்பிக்கையோடும் உழைத்த இயேசுவின் சீடர்கள். நம்மை வெறுமைப்படுத்துவதோடு இயேசுவின் சீடத்துவ மனநிலையில் வாழவும் உழைக்கவும் உந்துவதே இயேசுவின் உயிர்ப்பு. அவ்வாறு உழைப்போர்க்கெல்லாம் உயிர்ப்பின் உன்னத நல்வாழ்த்துக்கள்.

    Next Story
    ×