search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆலங்குடி திருத்தலம் பற்றிய 20 சிறப்பு தகவல்கள்
    X

    ஆலங்குடி திருத்தலம் பற்றிய 20 சிறப்பு தகவல்கள்

    • இத்திருக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும்.
    • இத்தலத்து இறைவன் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

    1. தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

    2. ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

    3. இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையில் இருந்து ஒரு காத தூரத்தில் அமைந்துள்ளது.

    4. கீழக்கோபுர வாயில் தென்புறம் சப்தமாதாவின் ஆலயமும், ஈசானிய திக்கில் பாதாள பைரவி காளியம்மன் ஆலயமும், தெற்கு கோபுர வாயில் கீழ்புறம் மேற்கு நோக்கி கல்யாண சாஸ்தா ஆலயமும், தேர் முட்டிக்கருகில் கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்தில் கல்யாண வீரபத்ரரும் தஷன் விநாயகர் சன்னதியும் உள்ளன.

    5. ஆலங்குடிக்கு அருகில் உள்ள நகரமான கும்ப கோணத்தில் தங்கும் வசதி உள்ளது-. கும்பகோணம் ஆலங்குடியில் இருந்து வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    6. இத்தலத்து இறைவன் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். எனவே இத்திருக்கோவிலின் காலத்தை நிர்ணயிக்க இயலவில்லை. ஞானசம்பந்தரின் காலம் கி.பி.ஆறு, ஏழு நூற்றாண்டாகும். எனவே அதற்கு முன்னரே இவ்வாலயம் இருந்ததாக கருத்தில் கொள்ளலாம்.

    7. விஸ்வாமித்திரர், அஷ்டதிகடபாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும்.

    8. அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, லட்சுமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர் தம் தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்டத் தலம்.

    9. இத்திருத்தலத்தை சுற்றி பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிழ்த புஷ்கரணி, ஞான கூடம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.

    10. இத்திருக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும்.

    11. விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், சனகாதி முனிவர்கள், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகபிரம்ம மகரிஷி போன்றோரால் பூஜிக்கப்பட்ட தலம்.

    12. அம்மை இங்கு ஈசனைத் திருமணம் புரிந்து கொண்டதாகத் தல புராணம் சொல்கிறது. இந்தத் திருமணத்தைக் காண வந்த திருமால், பிரம்மா, லட்சுமி தேவி, கருட பகவான், ஐயனார், வீரபத்திரர் ஆகியோர் தங்களது பெயரால் தனித்தனி லிங்கங்களை ஆலங்குடி திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    13. திருஞானசம்பந்த ரால் பாடல் பெற்ற திருத் தலம். அப்பர் அடிகளால் திருவீதிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்றது.

    14. ஆலங்குடி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று, ஞான முக்தி அடைந்தார்.

    15. காசி ஆரண்யம், திருஇரும்பூளை என்கிற பெயர்களும் ஆலங்குடிக்கு உண்டு. இரும்பூளை என்பது இந்த ஆலயத்தின் தல விருட்சம். ஒருவித மூலிகை மருந்துத் தாவரம். துர்தேவதைகள் நம்மை அண்ட விடாமல் தடுக்கும் சக்தியும், விஷ முறிவு சக்தியும் இரும்பூளைக்கு உண்டு.

    16. பஞ்ச ஆரண்ய (ஆரண்யம்-காடு) தலங்களுள் ஆலங்குடியும் ஒன்று. மற்ற நான்கு தலங்கள்& திருக்கருகாவூர், திருஅவளிவநல்லூர், திருஅரதைப் பெரும்பாழி, திருக்கொள்ளம்பூதூர் ஆகியவை. இந்த பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவது காலமான சாயரட்சை வழிபாட்டுக்கு உகந்த தலம்இது.

    17. முக்தி தரும் ஷேத்திரம் காசி என்பர். அதற்கு இணையான தலம் ஆலங்குடி. புனித நகரமாம் காசியில் இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு ராம நாமத்தை அவர்களது செவியில் உபதேசம் செய்து மோட்சம் அளிக்கிறார் ஈசன். அதுபோல் காசி ஆரண்யம் எனப்படும் ஆலங்குடி தலத்தில் இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்குப் பஞ்சாட்சர உபதேசம் செய்து முக்தி அளிக்கிறார் எம்பெருமான். இந்தத் திருத்தலத்தில் இறக்கும் பேறு பெற்ற பசு, பறவை, மிருகம், மனிதன் முதலான சகல ஜீவ ராசிகளும் மோட்சத்தையே அடைகின்றன.

    18. ஆதி சங்கரர் இந்த திருத்தலத்துக்கு யாத்திரையாக வந்துள்ளார். ஞான மகானான ஆதி சங்கரர், ஞான குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் மகா வாக்கிய உபதேசமும், ஆய கலைகள் அறுபத்து நான்கைப் பற்றிய ஞானத்தையும் பெற்றிருக்கிறார். இந்த ஞானம் பெற்றதால் மகிழ்ந்த ஆதி சங்கரர், கரு பகவானைப் போற்றி தோத்திரம் செய்திருக்கிறார்.

    19. சகல வளங்களையும் அருளும் தேவியான ஸ்ரீ மகாலட்சுமி, இந்த குரு பகவானை வழிபட்டு, சந்தான பாக்கியம் பெற்றாள் என்கிறது தல புராணம். ஈசனின் அருளால் கீர்த்தி, மணி, நிசரன், சாதவேதசன், காமன், மனோகரன் என்கிற ஆறு மக்கட் செல்வங்களைப் பெற்றாள். இந்த மகிழ்ச்சியின் அடையாளமாக யானையின் மீது புனித நீர் நிரப்பப்பட்ட தங்கக் குடங்களை வைத்து உலா வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்தாள்.

    20. குரு பகவானுக்கு உண்டான தலம் மட்டுமல்ல ஆலங்குடி. இங்கே தனிச் சந்நிதியில் தரிசனம் தரும் சனி பகவான் சிறந்த வரப்ரசாதி. சனியால் ஏற்படும் தொல்லைகளுக்கு, ஆலங்குடிக்கு வந்து இவரைப் பிரார்த்தித்தால், நம்மைக் காப்பார் அவர். சனி பகவானுக்கு இங்கே வாகனம் காகம் அல்ல. கருடன்!

    Next Story
    ×