search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஊர்கூடி மகிழும் ஆடிப்பெருக்கு நன்னாள்
    X

    ஊர்கூடி மகிழும் ஆடிப்பெருக்கு நன்னாள்

    • ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள்.
    • விதைத்தலுக்கு முன்னர் ஆனி மாதம் பெய்யும் மழை, பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது.

    உத்திராயண காலமான தை மாதம் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலமான ஆடி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருப்பதை தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தனர். வேளாண் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகள் பாயும் கரையோரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைந்துள்ள படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் பெருகும் ஆற்று வெள்ளம் காரணமாக அந்த 18 படிகளும் மூழ்கிவிடும். அந்த புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக கொண்டாடப்படும் தமிழர் பண்பாடு ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.

    விதை, விதைத்து நாற்று நட்டுப் பயிர் வளர்க்கும் நாள்களின் அடிப்படையில் அமைந்த விழா ஆடிப்பெருக்கு. நிலத்தில் நாற்று நடப்படுவதற்கு முன்னர் நீரோட்டம் என்ற ஆற்றுப்பெருக்கு கணக்கிடப்படுகிறது. தென்மேற்குப் பருவக்காற்றினால் மழை பொழிந்து, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்றாகத் திரண்டு நீராடி மகிழும் விழா ஆடிப்பெருக்கு நாள்.

    ஒகேனக்கல் முதல் காவிரிப்பூம்பட்டினம் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் பொதுமக்கள் ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பயிர் செய்ய உற்ற துணையான நீரை வணங்கி, விதைக்க ஆரம்பிக்கும் ஆடிப்பெருக்கு விழா சங்க காலம் முதல் இந்த நாள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நீரை பயன்படுத்திப் பயிர் வளர்க்கும் வழிகளோடும், மழையையும் அதைப் பயன்படுத்துவதை நினைவுகூரும் நாளாகவும் ஆடிப்பெருக்கு அமைகிறது.

    அந்த நல்ல நாளில் நீர் நிலைகள், ஆறுகள் அருகே பொதுமக்கள் ஒன்றாக கூடி, தண்ணீரை வணங்கி, வயலில் விதைக்கும் பணிகளை ஆரம்பிப்பர். அதை கொண்டாடும் வகையில் கிராமப்புற சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வார்கள்.

    ஆற்றங்கரையில் மக்கள் கூடியும், கோயில்களில் வழிபாடு செய்தும் மகிழ்வார்கள். பெண்கள் ஆற்றங்கரையில், சாணத்தால் மெழுகி கோலமிட்டு, படையலிட்டு செழிப்பான விளைச்சலைத் தருவதற்காக இயற்கையை போற்றும் விதமாக அகல் விளக்கேற்றி வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவர். பின்னர் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த தேங்காய், தக்காளி, எலுமிச்சை, தயிர், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.

    ஆடிப்பெருக்கு நாளில் இயற்கை மற்றும் கடவுளை வழிபடுவதன் மூலம், ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல, மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    சூரியன் இயக்கம், காற்றின் போக்கு, நிலத்தின் பக்குவம் ஆகியவற்றிற்கேற்ப நீரைப் பயன்படுத்தி பயிர் வளர்க்கும் நமது வேளாண் பண்பாட்டில், விதைப்பு செய்யும் காலமாக ஆடி மாதம் அமைகிறது. நாற்று விட்டு, நடவுக்கு முன் ஆடி பதினெட்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. நட்ட பயிர் வளர்வதற்கேற்ற நீர்வளம் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கிடைக்கிறது.

    விதைத்தலுக்கு முன்னர் ஆனி மாதம் பெய்யும் மழை, பயிர் வளர்ச்சிக்கு ஏற்றது. பயிர் மழையைத் தாங்கி நிற்கும் ஐப்பசி மழை, குளிரும் வெப்பமுமான சூழலில் பயிர் வளர்ச்சி, பின் தை மாதம் அறுவடை என பெய்யும் மழையை ஒட்டியே பயிர் வளர்க்கப்பட்டது.

    நீர் மேலாண்மை செய்ய சூரியன் இயக்கத்தை ஒட்டி ஆறு, குளங்கள் சீரமைக்கப்பட்டு, நீரின் அருமை அறிவுறுத்தப்படும் நாள் ஆடிப்பெருக்கு ஆகும். கடவுளையும், இயற்கை வழிபாட்டையும் இணைத்து மேற்கொள்ளப்படும் ஆடிப்பெருக்கு நாள், தற்சார்பு விவசாய வழிமுறைகளை வெளிப்படுத்தும் வகையில் காலம்காலமாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

    Next Story
    ×