search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கற்பூர படியேற்றசேவை நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கற்பூர படியேற்றசேவை நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கற்பூர படியேற்ற சேவை

    நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
    108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா நேற்று முன் தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணிவரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தனுமண்டபத்திலிருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பித்தனர்.

    இரவு 11.30 மணி முதல் நேற்று அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் (பக்திக்கு குலம் தடை இல்லை என்பதை உணர்த்துதல்) எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார்.

    பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அவ்வாறு நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    கைசிக ஏகாதசியை முன்னிட்டு இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×