search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று பரிவேட்டை திருவிழா

    பகவதி அம்மன் பாணாசுரம் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள கோபால கிருஷ்ண சாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, இரவில் வாகன பவனி போன்றவை நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் விழாவான நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு கோவிலின் வெளிபிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன்பிறகு மதியம் 12.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மன் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.

    பின்னர், கோவிலில் இருந்து புறப்படும் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரதிவீதி, வடக்கு ரதவீதி, மெயின்ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதான புரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்றடைகிறது.

    அங்கு பகவதி அம்மன் பாணாசுரம் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள கோபால கிருஷ்ண சாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார்.

    அங்கு பகவதி அம்மனுக்கும், நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன்பிறகு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருகோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழாவைெயாட்டி கன்னியாகுமரியில் நாளை (வெள்ளிக் கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து தங்க நாற்கர சாலை வழியாக கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும். இதுபோல், கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் பஸ்கள் இதே வழியாக நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×