search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குதிரை வாகனத்தில் உற்சவர் சரநாராயண பெருமாள் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
    X
    குதிரை வாகனத்தில் உற்சவர் சரநாராயண பெருமாள் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

    திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏக தின பிரம்மோற்சவம்

    திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏக தின பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவை நிகழ்ச்சியும், சரநாராயண பெருமாள் கோவிலில் நடைபெறும் என்பது சிறப்பாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏக தின பிரம்மோற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவரான சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சரநாராயண பெருமாள், திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு தோமால சேவை நடந்தது. பின்னர் 7 மணிக்கு ஏகதின பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 9 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 11 மணிக்கு சேஷ வாகனத்திலும், மதியம் 12 மணிக்கு கருட வாகனத்திலும், 3 மணிக்கு யானை வாகனத்திலும், 4 மணிக்கு சூர்ணோத்சவமும், மாலை 5 மணிக்கு குதிரை வாகனத்திலும் உற்சவரான சரநாராயண பெருமாள் எழுந்தருளி, கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதையடுத்து மாலை 6 மணிக்கு கோவிலில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த சிறிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சரநாராயண பெருமாள் எழுந்தருளினார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட கோவில் உள்பிரகாரத்தை தேர் சுற்றி வந்தது. பின்னர் 7 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    Next Story
    ×