search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் வளாகத்தில் செடி, கொடிகள், புற்கள் முளைத்து காடு போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    கோவில் வளாகத்தில் செடி, கொடிகள், புற்கள் முளைத்து காடு போல் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

    மானம்பாடி நாகநாதசாமி கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணி செய்ய பக்தர்கள் கோரிக்கை

    மானம்பாடி நாகநாதசாமி கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிற்றூர் மானம்பாடி. இங்கு அமைந்துள்ளது நாகநாதசாமி கோவில். 11-ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் கல்வெட்டுகளில் கைலாசநாதர் கோவில் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இங்குள்ள இறைவன், நாகநாதசாமி எனஅழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுகளில் இவரது பெயர் கைலாச முடையார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் வணிக தலமாக விளங்கியது. நாகன்பாடி என்று அழைக்கப்பட்ட இவ்வூர் பிற்காலத்தில் மானம்பாடி என மருவியது. இந்த ஊர் வீர நாராயணபுரம் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில்(கி.பி. 1012-1044) திருப்பணி செய்ததாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பழைமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த கோவிலில் பல ஆண்டுகள் சீரமைப்புப் பணிகள் நடைபெறாததால் கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை 20 மீட்டர் அகலப்படுத்துவதற்கான விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பகுதியில் விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை கண்டறியும் பணிகள் நடக்கிறது. இதில் கோவிலின் வடபகுதியும் அடங்கும்.

    இதற்கு முன்பு நடந்த சாலை விரிவாக்க பணியின்போது இந்த, கோவில் மதிற்சுவர் முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டது. சாலை ஒப்பந்தகாரர், தனது சொந்த செலவில் இந்த மதிற்சுவரை புதிதாக கட்டிக் கொடுத்தார்.

    தற்போது மீண்டும் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி இருப்பதால் கோவில் சிதையும் அபாயத்தில் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த கோவிலை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மகாமக திருவிழாவின்போது கருங்கற்களை பிரித்தனர். ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிலைகளை தொல்லியல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து தனிகொட்டகை அமைத்து அங்கு பாதுகாப்பாக வைத்தனர்.

    அதன் பின்னர் கோவிலில் திருப்பணிகள் செய்ய தொடங்கினர். ஆனால் சில வாரங்களிலேயே அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இந்த கோவில் தற்போது செடி, கொடிகள் மண்டி, புற்கள் முளைத்து புதர்கள் நிறைந்து காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலில் கோபுரம் மற்றும் மதில் சுவர்களில் செடிகள், மரங்கள் முளைத்தும் காணப்படுகிறது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து பல்வேறு ஆண்டுகள் ஆனதால் திருப்பணி வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும். இந்த பணிகள் தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் நடைபெற வேண்டும். முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர் திருப்பணி வேலைகளை தொடங்க வேண்டும் என்றும் இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் தெரிவித்தனர்.

    உடனடியாக இந்த கோவிலில் பழைமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை பாதுகாத்து, வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×