search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.
    X
    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

    சாரங்கபாணி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்

    ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வெட்டவெளியில் நிறுத்தப்பட்டு இருந்த கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் சாரங்கபாணி கோவில்அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இந்தகோவில் போற்றப்படுகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாக கருதப்படும் பெருமையுடைய இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    கும்பகோணத்தில் உள்ள வைணவ கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இந்த கோவிலுக்காக பெரிய தேர், சிறிய தேர் என 2 தேர்கள் உள்ளன. இதில் பெரிய தேருக்கு சித்திரை மாதமும், சிறிய தேருக்கு தை மாதமும் தேரோட்டம் நடைபெறும். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று பெரிய தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதை யொட்டி கடந்த மார்ச் 29-ந் தேதி முதல் தேர் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டது. பின்னர் தேரின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடைபெற இருந்த தேரோட்டம் நிறுத்தப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுவது குறித்து பக்தர்கள் மிகுந்த மகழ்ச்சியில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததால் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் ரத்தானது. இதனால் தேர் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    தேரோட்டம் நடக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மழையில் நனையாமலும்,, வெயிலில் காயாமலும் பாதுகாக்கும் வகையில் தனியார் வங்கி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.தேரோட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் மேற்கூரை பிரிக்கப்பட்டு 2 மாதங்களாக தேர் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் தேரில் உள்ள மரச்சிற்பங்கள் வீணாவதைக்கண்டு பக்தர்கள் மிகவும் வேதனையடைந்தனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உடனே முன்பிருந்ததைபோல மீண்டும் மேற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியானது.

    இதனையடுத்து தற்போது கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கோவில் நிர்வாகத்திற்கும் இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
    Next Story
    ×