search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரஸ்வதி தேவி
    X
    சரஸ்வதி தேவி

    சரஸ்வதி தேவியின் சிறப்பு பண்புகள்

    முப்பெரும் தேவியரில் ஒருவரான சரஸ்வதிக்கு கலைமகள், பத்மாக்‌ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, செளதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப்பல பெயர்கள் உள்ளன.
    பிரம்மா உலகைப் படைக்கின்றபோது அவரது உடல் இரு கூறுகளாகப் பிரிந்து ஒரு பகுதி ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் மாறுகின்றது. அந்தப் பெண்ணே சரஸ்வதி என்று சில புராணங்கள் கூறுகின்றன. சரஸ்வதி தேவி பிரம்மாவின் நாவில் தோன்றியவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

    தேவிபாகவதத்தில் சரஸ்வதி தேவியானவள் சாத்வீக குணமுடையவள், மஞ்சள் வண்ண ஆடை அணிந்தவள் என்றும், அணிகலன்கள் சூடி கைகளில் சுவடியும், வீணையும் ஏந்தியவள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரிக்வேதத்தில் கலைவாணியானவள் பாடலில் உறைபவள், ஒலியில் உறைந்திருப்பவள், இசையில் கலந்திருப்பவள், அறிவின் உறைவிடம், நினைவின் உறைவிடம், சகல கல்விக்கும் சொந்தமானவள், மொழி மற்றும் எழுத்தின் வடிவானவள் என்றும் விஞ்ஞானம், கல்வி அறிவு போன்ற எண்ணற்ற கலைகளின் ஒருமித்த வடிவு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. வேதம் என்பது அறிவு, அறிவின் ஆதாரம் மற்றும் அறிவின் கர்ப்பம் சரஸ்வதி என்று புராணங்கள் கூறுகின்றன.

    “அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்” என்கிறது கந்தபுராணம். சரஸ்வதியைப்பற்றி தமிழில் “சரஸ்வதி அந்தாதி” எனும் நூலைக் கம்பரும், “சகலகலாவல்லி மாலை” என்ற நூலைக் குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.

    சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், செளரம் என அனைத்திலும் சமயங்கடந்த தெய்வமாக சரஸ்வதி வணங்கப்படுகின்றாள்.
    Next Story
    ×