search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு விழா நடந்த காட்சி.
    X
    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு விழா நடந்த காட்சி.

    குடியாத்தத்தில் பக்தர்கள் ஆரவாரமின்றி 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்த கெங்கையம்மன் சிரசு விழா

    நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வர ஆர்வமாக இருந்த நிலையில் தடைகள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு பக்தர்களும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
    குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 16-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும் வைகாசி ஒன்றாம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறும்.

    கெங்கையம்மன் திருவிழா இந்த ஆண்டு குறைந்த அளவு பக்தர்களை கொண்டே நடைபெற்றது.

    தற்போது கொரோனா பரவலால் தடை உத்தரவு அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் திருவிழாக்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.இதனால் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா தடைப்படும் நிலையிலிருந்தது இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து திருவிழா நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் குறைந்த அளவு கோவில் பணியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கொண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.

    இதனையடுத்து நள்ளிரவு சுமார் 1 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட அம்மன் சிரசு கோவிலின் உள்ளே வலம் வந்தது. இதைத் தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் கெங்கை அம்மன் சிரசு பொருத்தப்பட்டது.

    சிறிது நேரத்திற்கு பின்பு சண்டாளச்சி அம்மன் உடலில் இருந்து கெங்கை அம்மன் சிரசு பிரிக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. சுமார் 1½ மணிநேரத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் முடிவு பெற்றது.

    கோவில் அருகே உள்ள தெருக்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு வராவண்ணம் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

    நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வர ஆர்வமாக இருந்த நிலையில் தடைகள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு பக்தர்களும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். மாவட்டத்தில் விடுமுறையுடன் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா சுமார் 1½ மணி நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.

    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு விழா நடந்த காட்சி.
    Next Story
    ×