search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வள்ளலார்
    X
    வள்ளலார்

    வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்

    வள்ளலார், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய இந்த நான்கை பற்றியும் சிறு குறிப்பாக இங்கே பார்ப்போம்.
    நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்தார். அனைத்து உயிர்களுக்குமான ஜீவ காருண்யத்தைப் பற்றி பேசினார். இவர் வலியுறுத்திய பல தத்துவங்கள் இன்றளவும் பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    வள்ளலார், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய இந்த நான்கை பற்றியும் சிறு குறிப்பாக இங்கே பார்ப்போம்.

    இந்திரிய ஒழுக்கம்

    * கேடான வார்த்தைகள் செவி புகாதபடி, இறைவனின் நாமங்களை கேட்பது.

    * குரூரமாக பார்க்காமல் இருப்பது.

    * சுவையை விரும்பாமல் இருப்பது.

    * இனிமையாக பேசுவது.

    * உயிர்வதை ஏற்படும்போது, எவ்வித தந்திரத்தையாவது பயன்படுத்தி அதைத் தடுப்பது.

    * பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்.

    * மிதமாக உணவு உண்ணுதல்.

    * அதிக இன்பத்திற்கு ஆசைப்படாதிருத்தல்.

    * சஞ்சரிக்கும் காலத்தில், காலில் கவசம் தாித்தல்.

    * உச்சி, மார்பு முதலிய அங்கங்களை மறைத்தல்.

    * அழுக்காடை உடுத்தாமல் இருப்பது.

    கரண ஒழுக்கம்

    * மனதை புருவ மத்தியில் நிறுத்தி ஒருமுகப்படுத்துதல்.

    * கேடான விஷயங்கள் நம்மை அண்டாமல் இருப்பது.

    * மற்றவர்களின் குற்றத்தை கண்டுபிடிக்காமல் இருப்பது.

    * பிறர் மீது கோபம் கொள்ளாமல் இருத்தல்.

    * நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.

    * தீய குணங்களால் ஏற்படும் கெடுதிகளை நீக்கி, இயற்கையான சத்துவ குணத்தோடு இருத்தல்.

    * தனது தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல்.

    ஜீவ ஒழுக்கம்

    ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும், ஜாதி, சமயம், பேதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரபந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, அனைவரும் நம்மவர் களாக, சமமாக நினைத்து வாழுதல்.

    ஆன்ம ஒழுக்கம்

    யானை முதல் எறும்பு வரை, இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து சரீரங்களிலும் உள்ள ஆன்மாவை திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும், யாதும் நீக்க மறக் கண்டு, எவ்விடத்திலும் பேதமற்று இருத்தல்.
    Next Story
    ×