search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தியாகராஜசுவாமி-கமலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்பிரகார வளாகத்தை வலம் வந்த காட்சி.
    X
    தியாகராஜசுவாமி-கமலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்பிரகார வளாகத்தை வலம் வந்த காட்சி.

    தஞ்சை பெரியகோவில் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு: பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

    கொரோனா பரவலால் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஞ்சை பெரியகோவில் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
    உலக பிரசித்தி பெற்ற இந்த பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பெரியகோவில் சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா தொற்று 2-வது அலை பரவுவதால் கோவில் விழாக்களுக்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளது.

    இருப்பினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோவிலுக்குள் சாமி புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வழக்கம்போல் கடந்த 8-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு விழா நாட்களில் தினமும் கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடு, சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுகாலை நடைபெற இருந்தநிலையில் கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்டது. இதன்காரணமாக கோவில் உள்பிரகாரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், கமலாம்மாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவில் குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் சாமி புறப்பாடு நடைபெற்றது. ஏற்கனவே பெரியகோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக சாமி புறப்பாடு நடைபெற்றது.

    தஞ்சை பெரியகோவிலில் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிதாக தேர் செய்யப்பட்டு 100 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலைஅடைந்தனர். வருகிற 26-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
    Next Story
    ×